உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் உருளுதண்டம் போட்டு நூதன போராட்டம் வாழப்பாடியில் பரபரப்பு


உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் உருளுதண்டம் போட்டு நூதன போராட்டம் வாழப்பாடியில் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Dec 2018 3:45 AM IST (Updated: 28 Dec 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று வாழப்பாடியில், விவசாயிகள் உருளுதண்டம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழப்பாடி, 

சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன்படி, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நேற்று 11-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்திலும், 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டத் திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று வாழப்பாடி சேசன்சாவடி யில் விவசாயிகள் உருளு தண்டம் போடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது வேப்பிலையை கையில் பிடித்து கொண்டு தரையில் உருளுதண்டம் போட்டு போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் கொங்குராஜாமணி தலைமை தாங்கினார். இதில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் கொங்குராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைப்பதால், விவசாயம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இதை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் எங்களது கோரிக்கைக்கு தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வருகிற 2-ந் தேதிக்குள் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து விவசாயிகள் கூட்டியக்கமும் சேர்ந்து தமிழக சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story