மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.37 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்


மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.37 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்
x
தினத்தந்தி 28 Dec 2018 3:30 AM IST (Updated: 28 Dec 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி தாலுகாவில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் வீரராகவராவ் ரூ.37 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா பிடாரிசேரி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. முகாமில் ஏராளமானோர் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். மேலும் இந்த முகாமையொட்டி ஏற்கனவே 119 முன் மனுக்கள் பெறப்பட்டன. இதைதொடர்ந்து 143 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கி பேசியதாவது:-

அரசு அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வு காணும் விதமாக மாதந் தோறும் ஒவ்வொரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், அந்த திட்டங்களின் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கி கூறப்படுகிறது.

விவசாயிகள் நலனை பாதுகாத்திடும் வகையில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 2016-17-ம் ஆண்டில் சுமார் ரூ.550 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல 2017-18-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை விரைவில் வழங்கப்படும். தனிநபர் இல்ல கழிப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு ரூ.12 ஆயிரம் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. திறந்த வெளியில் மலம் கழிப்பதன் மூலம் ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தவிர்த்து, வீடுகள் தோறும் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதோடு முறையாக பயன்படுத்தி பராமரிக்கவேண்டும்.

வருகிற 1-ந்தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பதை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் வேளாண்மைதுறை இணை இயக்குனர் சுசிலா, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் முருகேசன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story