பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய திருவண்ணாமலை மாணவி மீண்டும் கல்லூரியில் சேர்க்ககோரி மனு


பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய திருவண்ணாமலை மாணவி மீண்டும் கல்லூரியில் சேர்க்ககோரி மனு
x
தினத்தந்தி 28 Dec 2018 3:45 AM IST (Updated: 28 Dec 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய திருவண்ணாமலை வேளாண் கல்லூரி மாணவி மீண்டும் தன்னை கல்லூரியில் சேர்க்ககோரி கோவை வேளாண் பல்கலைக் கழக பாதுகாப்புத்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தார்.

வடவள்ளி, 

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட திருவண்ணாமலை கல்லூரியில் படிக்கும் கிரிஜா என்ற மாணவிக்கு அந்த கல்லூரி பேராசிரியர் தங்க பாண்டியன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே பேராசிரியர் தங்க பாண்டியன் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த டீன் ராஜேந்திரன், பேராசிரியர்கள் புனிதா, வைதேகி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவி புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து பேராசிரியர் தங்க பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் புகார் அளித்த மாணவி கிரிஜாவும் திருவண்ணாமலையில் இருந்து திருச்சி வேளாண்மை கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கிரிஜா திருச்சியில் இருந்து கோவைக்கு இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்தார். இதனால் அவருக்கு கோவையில் சேர அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் வந்து சேர காலதாமதம் ஆனதால் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்திய மாணவர் சங்க மாநில துணைத்தலைவர் நிருபன் சக்ரவர்த்தி, மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட துணை தலைவர் காவியா ஆகியோருடன் மாணவி கிரிஜா மற்றும் பலர் நேற்று வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு வந்தனர்.

தொடர்ந்து கிரிஜாவை ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்க்கக்கோரி பதிவாளர் அல்லது துணைவேந்தரை சந்தித்து மனு கொடுக்க அனுமதி கேட்டனர்.

அவரை சந்திக்க முடியவில்லை என்பதால் அவர்கள், பல்கலைக்கழக பாதுகாப்புத்துறை அதிகாரி மணிகண்டனை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

இதுகுறித்து மாணவி கிரிஜா கூறுகையில், இந்த பிரச்சினை காரணமாக கடந்த ஒரு வருடமாக எனது படிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடும் மன உளைச்சலால் தவிக்கிறேன். எனவே எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஏதாவது ஒரு வேளாண் கல்லூரியில் படிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

Next Story