இணைப்பு ரெயில் முன்கூட்டியே சென்று விட்டதால் மானாமதுரை ரெயில் நிலையத்தில் பயணிகள் திடீர் மறியல்
மதுரை ரெயில் வருவதற்குள் விருதுநகர்- திருச்சி பயணிகள் ரெயில் மானாமதுரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றதால் பயணிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மானாமதுரை,
ராமேசுவரத்தில் இருந்து மானாமதுரை வழியாக மதுரைக்கு தினந்தோறும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது ராமேசுவரம் கடலில் உள்ள ரெயில்வே பாலத்தில் பணிகள் நடைபெற்று வருவதால் கடந்த சில நாட்களாக இந்த பயணிகள் ரெயில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு மானாமதுரைக்கு 7.59-க்கு வந்தடைகிறது. பின்னர் 8 மணிக்கு மானாமதுரையில் புறப்பட்டு மதுரை செல்கிறது.
இதே போல் விருதுநகரில் இருந்து விருதுநகர்-திருச்சி பயணிகள் ரெயில் தினமும் காலை 6.10-க்கு புறப்பட்டு மானாமதுரை ரெயில் நிலையத்துக்கு 7.35 மணிக்கு வந்தடைகிறது. அதன் பின்னர் மீண்டும் இந்த ரெயில் காலை 8.05 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்கிறது. இந்த ரெயிலை மாற்று ரெயிலாக பல்வேறு ரெயில்களில் வரும் பயணிகள் பயன்படுத்தி அந்த ரெயில் மூலம் சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த ரெயிலை ராமேசுவரம்-மதுரை ரெயில் பயணிகள் அதிக அளவில் மாற்று ரெயிலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை ராமநாதபுரத்தில் இருந்து மதுரை வந்த பயணிகள் ரெயில் கால தாமதமாக காலை 8.20 மணிக்கு தான் மானாமதுரை வந்தடைந்தது. இந்த ரெயிலில் வந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் மாற்று ரெயிலான விருதுநகர்-திருச்சி பயணிகள் ரெயிலுக்காக காத்திருந்தனர்.
ஆனால் அதற்கு முன்னதாகவே விருதுநகர்-திருச்சி பயணிகள் ரெயில் வழக்கமான நேரத்தில் மானாமதுரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற தகவல் அங்கு காத்திருந்த ரெயில் பயணிகளுக்கு தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அவர்கள் வந்த ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரெயில் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் ரெயில்வே அதிகாரிகள் அறையை முற்றுகையிட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசார் மறியலில் ஈடுபட்ட ரெயில் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுக்கும்படி மறியலில் ஈடுபட்டவர்களிடம் ரெயில்வே போலீசார் கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நேற்று காலை நடைபெற்ற இந்த திடீர் ரெயில் மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story