மாவட்ட செய்திகள்

விருத்தாசலம் அருகே பரபரப்பு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம் + "||" + Thrill near Vriddhachalam Struggle the task of forming bore well stopped

விருத்தாசலம் அருகே பரபரப்பு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்

விருத்தாசலம் அருகே பரபரப்பு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்
விருத்தாசலம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக கிராமத்தை விட்டு வெளியேறவில்லை என்றால் எந்திரங்களை அடித்து நொறுக்குவோம் என்று எச்சரித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கம்மாபுரம், 

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ளது க.தொழுர் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணியில் ஈடுபட்டவர்களிடம் கிராம மக்கள் கேட்ட போது, ஊராட்சிக்கு குடிநீர் வழங்குவதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். 15 நாட்களுக்கும் மேலாக ஆயிரம் அடிக்கு கீழேயும் ஆழ் துளை கிணறு அமைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று குஜராத் மாநில பதிவு எண் கொண்ட ஒரு ‘கம்பரசர்’ வாகனம் அங்கு வந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த கிராம மக்களில் சிலர், அங்கிருந்த பணியாளர்களிடம் எதற்காக 15 நாட்களுக்கும் மேலாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளர்கள் என்று கேட்டனர். அப்போது அங்கிருந்த பணியாளர்கள் அனைவரும் இந்தி மொழியில் பேசினர். இதனால் அவர்களுக்கிடையே கருத்துகளை பகிர்ந்துகொள்வதில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் என்.எல்.சி. நிர்வாகம் 3-வது சுரங்கம் அமைப்பதற்காக இந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நிலத்தை கையகப்படுத்த உள்ளது. அதனடிப்படையில் க.தொழுர் கிராமத்தில் நிலத்தடி நீர் எந்த அளவில் உள்ளது, மண் வளம் எப்படி என்பது குறித்து அறிந்து கொள்வதற்காகவே ஆழ்துளை கிணறு அமைக்கப்படுவதாக அந்த பகுதி மக்களிடையே தகவல் பரவியது.

இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அனைவரும், ஆழ்துளை கிணறு அமைக்கும் இடத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும், இல்லையென்றால் லாரி மற்றும் எந்திரங்களை அடித்து நொறுக்குவோம் என்று கூறி அங்கிருந்த பணியாளர்களை எச்சரித்தனர். மேலும் என்.எல்.சி. நிர்வாகத்தையும், மத்திய அரசையும் கண்டித்து அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அப்போது பொதுமக்கள் உடனடியாக லாரி, போர்வெல் அமைக்கும் எந்திரங்களை தங்களது கிராமத்தில் இருந்து எடுத்து செல்லாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் கேட்டபோது, கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் தற்போது குடிநீர் தொடர்பான எந்த ஒரு பணியும் செய்யவில்லை. க.தொழுர் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி, மத்திய அரசு சார்பில் நிலத்தடி நீர் மட்டத்தை அளவீடு செய்யவும், தண்ணீரின் தரத்தை பரிசோதிக்கவும் நடத்தப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிவித்தார். ஆனால் அவர் மத்திய அரசு தான் பணிகளை மேற்கொண்டது என்று அவர் உறுதிபட தெரிவிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் கூறுகையில், 15 நாட்களுக்கு மேலாக ஒரு கிராமத்தில் யார் என்று கூட தெரிவிக்காமல் லாரி, எந்திரங்களை கொண்டு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்து வந்துள்ளது. ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்றால் அதில் பல்வேறு விதிமுறைகள் உள்ளது.

இதையெல்லாம் பின்பற்றி தான் இப்பணி மேற்கொள்ளப்பட்டதா? அல்லது விதிகளை மீறி மேற்கொள்ளப்பட்டதா என்று தெரியவில்லை. எனவே இதுபற்றி மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, இதன் உண்மை நிலையை தெளிவு படுத்திட வேண்டும். மேலும் ஏற்கனவே டெல்டா பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக பல்வேறு இடங்களில் இதுபோன்று ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் சில நிறுவனங்கள் ஈடுபட்டன. அதுபோன்றும் இங்கு பணி நடந்துள்ளதா என்று எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. எனவே இனி இதுபோன்று யார் வந்தாலும் அவர்களை கிராம எல்லையிலேயே தடுத்து நிறுத்தி வெளியேற்றுவோம் என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சாவு - 110 மணி நேர போராட்டம் வீணானது
பஞ்சாபில் 110 மணி நேர போராட்டத்திற்கு பின் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 2 வயது சிறுவன் உயிரிழந்தான்.
2. 440 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த 4 வயது சிறுமியின் உடலை மீட்பு குழுவினர் இன்று மீட்டனர்.
3. ராஜஸ்தானில் 400 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி; மீட்கும் முயற்சி தீவிரம்
ராஜஸ்தானில் 400 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமியை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.
4. அரியானாவில் 60 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 1 1/2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்
அரியானாவில் 60 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் ஒன்றரை வயது குழந்தை தவறி விழுந்துள்ளது.
5. ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு, வெள்ளாற்றில் இறங்கி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
வெள்ளாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆற்றுக்குள் இறங்கி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை அவர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.