கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம், சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தது - சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் வழங்கிய சம்பவத்தால் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக குறைந்துள்ளது. பொதுமக்களுக்கு அரசு ஆஸ்பத்திரியின் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சிவகாசி,
சிவகாசி பகுதியை சேர்ந்த வாலிபர் தனது உறவினருக்காக வழங்கிய ரத்தத்தில் எச்.ஐ.வி. இருந்துள்ளது. இந்த ரத்தம் கவனக்குறைவாக சாத்தூரில் உள்ள ஒரு ஆட்டோ டிரைவரின் மனைவிக்கு வழங்கப்பட்டு அவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ள நிலையில் நேரில் விசாரணை நடத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண் தனக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை வேண்டாம் என்று கூறியபோது மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் நவீன சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறேன். அதில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட கர்ப்பிணி பெண் தற்போது மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை அந்த பெண்ணும், அவரது குடும்பத்தினரும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தால் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார்கள். இல்லை என்றால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க கோரிக்கை வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.
சிவகாசியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் வழக்கமாக பட்டாசு, தீப்பெட்டி, அச்சக தொழிலாளர்கள் அதிகஅளவில் வந்து சிகிச்சை பெற்று செல்வது உண்டு. கடந்த மாதம் சிவகாசி பகுதியில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்தபோது ஒரு நாளைக்கு 1,300 பேர் வரை வந்து காய்ச்சலுக்கும் மற்ற நோய்களுக்கும் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். ஆனால் தற்போது சிவகாசி ரத்த வங்கியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. கிருமி கலந்து இருந்தது என்ற செய்தி பரவியது முதல் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த 24-ந்தேதி சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு நோய்களுக்காக 535 பேர் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். அதை தொடர்ந்து கடந்த 26-ந்தேதி சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு தவறுதலாக எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்டது என்று தகவல் பரவியதை தொடர்ந்து அன்று 313 பேர் மட்டுமே சிகிச்சை பெற வந்துள்ளனர். நேற்று 381 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
அரசு நல்ல நோக்கத்துக்காக சுகாதாரத்துறையை தொடங்கி அதில் பல லட்சம் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வர அச்சப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே பல கோடி ரூபாய் செலவு செய்து வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைக்கு மதிப்பு கிடைக்கும்.
இல்லை என்றால் பல கோடி ரூபாய் செலவு செய்து வாங்கி வைக்கப்படும் மருந்துகளும், மாத்திரைகளும் அரசு ஆஸ்பத்திரியில் வீணாகிப்போகும் வாய்ப்பு ஏற்படும். ஏற்கனவே பல அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளை நல்ல முறையில் கவனிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் தற்போது ரத்தம் செலுத்துவதில் கவன குறைவு ஏற்பட்டு ஒரு பெண்ணுக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட தகவல் அறிந்து பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரி என்றால் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை போக்கவும், பொதுமக்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளின் மீது நம்பிக்கை ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கையை சுகாதாரத்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story