தேர்தலில் தனித்து போட்டி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி


தேர்தலில் தனித்து போட்டி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி
x
தினத்தந்தி 28 Dec 2018 3:45 AM IST (Updated: 28 Dec 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை, 

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் மிகவும் வேதனை தரக்கூடிய ஒரு விஷயமாக உள்ளது. இதில் சிலர் கவனக்குறைவாக இருந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது. என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும் ஒரு சிஸ்டம் இருக்க வேண்டும். ரத்தத்தை பரிசோதனை செய்து இருக்க வேண்டும். இந்த சிஸ்டத்தை ஏன் கடைபிடிக்கவில்லை என்று தெரியவில்லை.

அதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டால் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சொல்ல இருக்கிறீர்கள் என்பது தான் தெரியவில்லை.

இனி வரும் காலங்களில் இது போன்று நடக்காமல் இருக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் உள்ள ரத்தத்தை பரிசோதனை செய்ய வேண்டும்.

இது போன்ற சம்பவம் நடந்த பிறகு தான் மக்களுக்கு விழிப்புணர்வு வருகிறது.

தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளோம். பாராளுமன்ற தேர்தலை பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி தொகுதி வாரியாக ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை தமிழக அரசு இன்னும் வாபஸ் பெறாமல் உள்ளது. இதுகுறித்து முதல்வருக்கு கடிதம் மூலம் மனு அனுப்பி வழக்கை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைப்போம். தயாரிப்பாளர், நடிகர் சங்கம் போன்றவற்றில் எனக்கு எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story