முதல்-அமைச்சரின் வீட்டை பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகையிட முயற்சி


முதல்-அமைச்சரின் வீட்டை பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 28 Dec 2018 5:00 AM IST (Updated: 28 Dec 2018 5:00 AM IST)
t-max-icont-min-icon

சம்பளம் கேட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகையிட முயன்றனர்.

புதுச்சேரி,

புதுவை அரசு நிறுவனமான பாப்ஸ்கோவில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த 18 மாதமாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. அவர்கள் நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைக்காக நேற்று முன்தினம் பாப்ஸ்கோ மேலாண் இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலாண் இயக்குனர் முத்துக்கிருஷ்ணனை சிறைபிடித்து அலுவலகத்துக்குள்ளேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த தர்ணா நள்ளிரவு வரை நீடித்தது. அதன்பிறகே ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட அவர்கள் திட்டமிட்டனர். இதற்காக புஸ்சி வீதி மணிக்கூண்டு அருகே கூடினார்கள். அங்கிருந்து முதல்-அமைச்சரின் வீட்டை நோக்கி புறப்பட ஆயத்தமானார்கள். அங்கு போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பாப்ஸ்கோ தலைவரான தனவேலு எம்.எல்.ஏ. அங்கு விரைந்து வந்து பாப்ஸ்கோ ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, முதல்கட்டமாக முதல்-அமைச்சரை சந்தித்து பேசுவோம் என்றார். அவரது சமரசத்தை ஊழியர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் ஊர்வலமாக சென்று சட்டசபை அருகே கூடினார்கள். அதன்பின் சங்க நிர்வாகிகள் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேசினார்கள். சம்பளம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இதுதொடர்பாக அமைச்சர் கந்தசாமியிடம் பேசி முடிவு எடுப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். அதன்பின் ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story