இணையதளம் மூலம் குடிநீர் கட்டணம் செலுத்தும் வசதி அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்


இணையதளம் மூலம் குடிநீர் கட்டணம் செலுத்தும் வசதி அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 28 Dec 2018 5:05 AM IST (Updated: 28 Dec 2018 5:05 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் இணையதளம் மூலம் குடிநீர் கட்டணம் செலுத்தும் வசதியினை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கிவைத்தார்.

புதுச்சேரி,

பொதுமக்கள் குடிநீர் வரியினை செலுத்துவதில் ஏற்படும் சிரமம் மற்றும் கால விரயத்தை தவிர்க்க, குடிநீர் வரியை இணையதளம் மூலமாக செலுத்துவதற்கு இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயலாளர் தேவேஷ்சிங், தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர்கள் கன்னியப்பன், லாரன்ஸ், பெட்ரோ குமார், ராமச்சந்திரன், தாமரை புகழேந்தி, உதவி பொறியாளர் சுந்தரமூர்த்தி, இளநிலை கணக்கு அதிகாரி முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர். பொதுமக்கள் பொதுப்பணித்துறையின் இணையதளத்தில் ( www.pwd.pon.gov.in) உள்ள இணைப்பு மூலமாக தங்களது குடிநீர் வரியை செலுத்தலாம்.

புதிய சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-  பொதுப்பணித்துறையில் தற்போது குடிநீர் கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக கழிவுநீருக்கான கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்த உள்ளோம். மின்துறையில் ஏற்கனவே ஆன்லைன் மூலம் கட்டணம் வசூலிப்பது நடைமுறையில் உள்ளது.

பொதுப்பணித்துறையில் என்ஜினீயர்கள் பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும். அதேபோல் காலி பணியிடங்களும் நிரப்பப்படும்.

புதுவையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சில வழிமுறைகளை கூறியுள்ளது. குறிப்பாக வார்டு மறுசீரமைப்பு, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகள், எம்.எல்.ஏ.க்கள் கருத்து கேட்க வேண்டியுள்ளது. அதை கேட்ட பின்பு உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Next Story