கிளிஜோதிடர் கொலை வழக்கு, சரணடைந்த வாலிபர் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர் - 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
கிளி ஜோதிடர் கொலை வழக்கில் சரணடைந்த வாலிபர் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூர் மங்கலம் பாரதி புதூரை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குமார் (35). இவர் திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா நுழைவாயில் அருகே அமர்ந்து கிளி ஜோதிடம் பார்த்து வந்தார். கடந்த 24-ந்தேதி பென்னி காம்பவுண்ட் பகுதியில் உள்ள ரோட்டில் வைத்து பட்டப்பகலில் மர்ம நபரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ரமேசை திருப்பூரில் தங்கி இருந்த நாகப்பட்டினம், குத்தாலம் பகுதியை சேர்ந்த ரகு என்பவர் கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்த ரகு சென்னை அம்பத்தூரில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் சரண் அடைந்தார்.
அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் கோர்ட்டு அனுமதியுடன் அவரை திருப்பூர் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு கவியரசு முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து ரகுவை ஜனவரி மாதம் 10-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இதனையடுத்து ரகுவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக ரகுவை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இன்று அல்லது நாளை கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர். அப்போது ஜோதிடர் ரமேஷ் கொலை தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என தெரிகிறது.
Related Tags :
Next Story