வாணாபுரம் அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி கணவன்– மனைவி பலி
வாணாபுரம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்– மனைவி பரிதாபமாக இறந்தனர்.
வாணாபுரம்,
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள பாவுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 60), விவசாயி. இவரது மனைவி விருதாம்பாள் (55). சின்னத்துரை தனது நிலத்தில் கரும்பு பயிரிட்டு உள்ளார். நேற்று முன்தினம் இரவு கரும்பு வயலுக்குள் விருதாம்பாள் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது அறுந்து கிடந்த மின்சார வயரை அவர் மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
வெகு நேரமாகியும் அவர் வராததால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் சின்னதுரை நேற்று காலை கரும்பு வயலுக்கு சென்றார். அங்கு விருதாம்பாள் இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சின்னதுரை மின்சாரம் பாய்ந்து கொண்டிருப்பது தெரியாமல் ஓடி சென்று விருதாம்பாளை தூக்க முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் வெகுநேரமாகியும் சின்னதுரை மற்றும் விருதாம்பாளை காணவில்லை என்று கரும்பு வயலுக்கு தேடி சென்றனர். அப்போது அங்கு 2 பேரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தச்சம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கியதில் கணவன்– மனைவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.