பொதுமக்களே உஷார்: ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு பணம் பறிக்கும் கும்பல் போலீஸ் அதிகாரி எச்சரிக்கை


பொதுமக்களே உஷார்: ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு பணம் பறிக்கும் கும்பல் போலீஸ் அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 Dec 2018 3:00 AM IST (Updated: 28 Dec 2018 8:09 PM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு பணம் பறிக்கும் கும்பலிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை, 

ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு பணம் பறிக்கும் கும்பலிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விவசாயியிடம் பணம் பறிப்பு 

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் திருமலைச்சாமி (வயது 60), விவசாயி. இவரது செல்போனுக்கு நேற்று காலை 8 மணிக்கு ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தன்னை தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி கிளையின் மேலாளர் என்று அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் இந்த டிசம்பர் மாதம் 31–ந்தேதியுடன் வங்கி கணக்கு ஏ.டி.எம். கார்டு காலாவதி ஆகிவிடும். அதற்கு பதிலாக புதிய கார்டு வழங்க உள்ளோம். எனவே, தற்போதுள்ள ஏ.டி.எம். கார்டு எண், அந்த அட்டையின் பின்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை கேட்டு உள்ளார். இதை நம்பிய திருமலைச்சாமி ரகசிய எண்களை மறுமுனையில் பேசியவரிடம் கூறிவிட்டார். மேலும் சிறிது நேரத்தில் ஓ.டி.பி. எனப்படும் ஒருமுறை பயன்படும் ரகசிய எண் வரும், அதையும் கூறுங்கள் என்று மர்ம நபர் கேட்டு அந்த எண்ணையும் பெற்று உள்ளார்.

சிறிது நேரத்தில் திருமலைச்சாமியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.3 ஆயிரம் எடுக்கப்பட்டிருந்தது. அந்த கணக்கில் ஏதோ ஒரு பொருள் வாங்கியதாகவும் குறுந்தகவலும் வந்தது. இதுதவிர அவருடைய மற்றொரு வங்கி கணக்கு ஏ.டி.எம். ரகசிய எண்களையும் பெற்று அதிலும் ரூ.1,000 எடுத்து உள்ளனர்.

போலீசில் புகார் 

இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சென்று விவரத்தை கேட்டார். அப்போது தங்களது வங்கியில் இருந்து யாரும் பேசவில்லை என்று பதில் அளித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த திருமலைச்சாமி பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மோசடி கும்பல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் வெவ்வேறு காரணங்களை கூறி பணம் பறிக்கும் செயலில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருகிறது. அவமானம் கருதி சிலர் இதை வெளியே சொல்ல மறுத்து விடுகின்றனர். மேலும் காப்பீட்டு தொகையை சரியாக கட்டாமல் பாதியில் விட்டவர்கள் செல்போன் எண்களை தேடிப்பிடித்து, ஏற்கனவே செலுத்திய காப்பீட்டு பிரீமியத்தொகைக்கு வட்டியுடன் சேர்த்து ஆயிரக்கணக்கில் உள்ளது. அதை தங்களுக்கு மத்திய அரசு தர உத்தரவிட்டு உள்ளது என்று கூறி, அதன்மூலம் ஏ.டி.எம். கார்டு ரகசிய எண்களை பெற்றும் பணத்தை எடுத்து விடுகின்றனர்.

எச்சரிக்கை 

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் கூறியதாவது:–

பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது செல்போன் எண்ணுக்கு வரும் மர்ம அழைப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும். மாதந்தோறும் பணம் தருகிறோம், அதற்கு முன்பணம் செலுத்துங்கள், வங்கி ஏ.டி.எம். கார்டு எண்ணை கூறுங்கள் என்று கேட்பார்கள். ஆனால் அதை பொதுமக்கள் நம்பிவிடக்கூடாது. எச்சரிக்கையுடன் உஷாராக இருக்க வேண்டும். யாரிடமும் தங்களது ரகசிய எண்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. இதுதொடர்பாக நெல்லை மாவட்டம் முழுவதும் போலீஸ் நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கி அதிகாரி விளக்கம் 

இதுகுறித்து நெல்லை சந்திப்பு இந்தியன் வங்கி உதவி பொதுமேலாளர் வெங்கட்ரமணன் கூறியதாவது:–

வங்கிக்கணக்கில் பணம் மோசடி செய்வதை தடுக்க வங்கிகள் சார்பில் அவ்வப்போது குறுந்தகவல் அனுப்பி எச்சரிக்கை செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதுபோன்று முதியவர்களை குறிவைத்து ஏ.டி.எம். கார்டு எண்ணை பெற்று பணத்தை எடுக்கும் கும்பல் உள்ளது. சமீபத்தில் மோசடி கும்பல் பயன்படுத்திய எண்ணை தொடர்புகொண்டு விசாரித்தபோது அந்த எண் பீகார் மாநிலத்தை சேர்ந்தது என்பது தெரியவந்தது.

பொதுவாக முதியோர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்குவதில் இதுபோன்ற சிக்கல்கள் உள்ளன. எனவே, ஏ.டி.எம். கார்டு வைத்திருக்கும் முதியோர்களிடம் அவர்களுடைய பிள்ளைகள், ஏ.டி.எம். கார்டு பயன்பாடு, அதன் மோசடி விவரங்கள் குறித்தும் எடுத்துக்கூற வேண்டும். ஏ.டி.எம். கார்டில் பணம் எடுப்பதற்கான 4 இலக்க ரகசிய குறியீட்டு எண்ணை எழுதி வைப்பதும் தவறான செயல் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பு 

முதியோர்களுக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க மட்டுமே பயன்படும் வகையில் ஏ.டி.எம். கார்டு வழங்கினால் சரியாக இருக்கும். அதுதவிர பணப்பரிமாற்றம், வணிக ரீதியான பயன்பாடுகளுக்கு அனுமதிக்கக்கூடாது. கட்டாயம் தேவைப்படுவோருக்கு மட்டும் அந்த வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். விவசாயியிடம் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story