சென்னை–பெங்களூரு டபுள் டெக்கர் ரெயிலில் பெட்டிகளை இணைக்கும் குழாயில் ‘திடீர்’ கோளாறு கால தாமதத்தால் பயணிகள் அவதி
சென்னை–பெங்களூரு செல்லும் டபுள் டெக்கர் ரெயில் பெட்டிகளை இணைக்கும் குழாய் பகுதியில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் 1½ மணி நேரம் தாமதமாக சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
அரக்கோணம்,
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு நேற்று காலை 7.25 மணிக்கு டபுள் டெக்கர் விரைவு ரெயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அப்போது கார்டு பெட்டிக்கு முந்தைய பெட்டியில் இணைப்பு பகுதியில் உள்ள குழாயில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் ரெயில் ஆவடி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு ரெயில் புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்கமாக 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் டபுள் டெக்கர் ரெயில் பழுது காரணமாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது.
இதனால் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு காலை 9.30 மணிக்கு ரெயில் வந்தது. அங்கு தயார் நிலையில் இருந்த ரெயில்வே பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் இணைப்பு குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். வழக்கமாக அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு காலை 8.28 மணிக்கு வந்து 8.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் டபுள் டெக்கர் ரெயில் நேற்று 9.30 மணிக்கு வந்து பழுது நீக்கப்பட்டு 10 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது.
சுமார் 1½ மணி நேரம் ரெயில் காலதாமதமாக சென்றதால் காட்பாடி, பெங்களூரு செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
டபுள் டெக்கர் ரெயிலில் இணைப்பு குழாய் பழுது குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.