நீண்ட நாட்களாகியும் தடுப்பணை கட்டாததால் வெற்றிலை பாக்கு, பழங்களுடன் கோரிக்கை மனு கொடுத்த விவசாயிகள்


நீண்ட நாட்களாகியும் தடுப்பணை கட்டாததால் வெற்றிலை பாக்கு, பழங்களுடன் கோரிக்கை மனு கொடுத்த விவசாயிகள்
x
தினத்தந்தி 29 Dec 2018 3:45 AM IST (Updated: 28 Dec 2018 8:19 PM IST)
t-max-icont-min-icon

குறைதீர்வு நாள் கூட்டத்தில், பொன்னையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக்கோரி விவசாயிகள் வெற்றிலை பாக்கு, பழங்கள், வேட்டி வைத்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

வேலூர், 

வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார், வேளாண்மை இணை இயக்குனர் சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். பொன்னையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக்கோரி பலமுறை மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தாம்பூல தட்டில் பழங்கள், வெற்றிலை, பாக்கு, வேட்டி ஆகியவற்றை வைத்து பொதுமக்களுடன் வந்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

பொன்னை ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி பல ஆண்டுகளாக மனுக்கள் கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் கோரிக்கை விடுத்து வருகிறோம். பொன்னையாற்றில் மணல் எடுக்கப்பட்டதால் விவசாய நிலங்கள் பாசனமின்றி தரிசு நிலங்களாக மாறிவிட்டன. இந்த ஆற்றின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் தண்ணீர் வராததால் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி வருகின்றன.

பொன்னை ஆற்றில் பள்ளேரி– கோட்டநத்தத்திற்கு இடையில் தடுப்பணை கட்டுவது சம்பந்தமாக அதிகாரிகள் அளவீடு செய்து, திட்ட அறிக்கை வெளியிட்டனர். தடுப்பணை கட்ட அரசும் நிதி ஒதுக்கியது. ஆனாலும் தடுப்பணை கட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொன்னை ஆற்றுப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி விவசாய பாசனம் மற்றும் குடிநீர் ஆகியவற்றிற்காக தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:–

விவசாயத்திற்கு மின்இணைப்பு கேட்டு பணம்கட்டி 3 வருடங்களாகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அகரம் ஆற்றுக்கால்வாயை தூர்வார வேண்டும். ஒவ்வொரு கூட்டத்திலும் மனு கொடுத்தும், கோரிக்கை வைத்தும் ஒரு வருடமாகியும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. கோரிக்கை மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து நிவர்த்தி செய்யவேண்டும்.

குடியாத்தம் பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன. அதற்கான இழப்பீடு மிகவும் குறைவாக இருக்கிறது. யானைகள் வருவதை தடுக்க 5 மீட்டர் அளவுக்கு பள்ளம் ஏற்படுத்த வேண்டும். இந்த நிலையில் வாணியம்பாடி பகுதியில் 6 பேரை சிறுத்தை கடித்துள்ளது.

விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க இழப்பீடு வழங்குவதுடன், மாத வாடகை வழங்க வேண்டும். ஒடுகத்தூர் பகுதியில் சாராய விற்பனை நடக்கிறது. இதனால் மின்மோட்டார்கள், ஆடு, மாடுகள் அதிக அளவில் திருட்டு போகிறது. வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் கூறினார்.


Next Story