ஆண்டிப்பட்டி அருகே சமூக வலைத்தளம் மூலம் சாதி பற்றி அவதூறு பரப்பிய வாலிபர் கைது - மற்றொருவர் தப்பியோட்டம்


ஆண்டிப்பட்டி அருகே சமூக வலைத்தளம் மூலம் சாதி பற்றி அவதூறு பரப்பிய வாலிபர் கைது - மற்றொருவர் தப்பியோட்டம்
x
தினத்தந்தி 28 Dec 2018 11:00 PM GMT (Updated: 28 Dec 2018 4:56 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே சமூக வலைத்தளம் மூலம் சாதி பற்றி அவதூறு பரப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கண்டமனூர்,

இன்றைய நாகரீக காலத்தில் சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கருத்துக்களை செய்திகளாகவும், வீடியோ மூலமும் பகிர்ந்து கொள்வது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் ‘டிக் டாக்’ எனப்படும் ஒரு செயலி மூலம் சமீப காலமாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் நடிப்பாற்றல், சமையல் குறிப்பு உள்பட பல தரப்பட்ட திறமைகளை பதிவு செய்கின்றனர். இதற்காக வாழ்த்தும் (லைக்) பெறுகின்றனர். இது பல நேரங்களில் நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டாலும், சில நேரங்களில் சமூக விரோதிகள் அதற்குள் புகுந்து தவறான கருத்துக்களை புகுத்தி, பிரச்சினைகளுக்கு வழிவகுத்து விடுகின்றனர்.

இதைப்போன்று விரும்பத்தகாத சம்பவம் ஆண்டிப்பட்டி அருகே நடந்துள்ளது. ஆண்டிப்பட்டி தாலுகா ராஜதானி அருகே உள்ள புதுப்பேட்டையை சேர்ந்த சந்திரன் மகன் அஜித்குமார் (வயது 21). இவரும் பாலக்கோம்பையை சேர்ந்த பாண்டியராஜன் மகன் வீரக்குமாரும் (29) இணைந்து ‘டிக் டாக்’ செயலி மூலம் பல்வேறு சாதி பற்றி அவதூறு பரப்பி உள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. இதனால் சமூகப் பிரச்சினை எழும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, அவதூறு பரப்பியவர்களை கண்டுபிடிக்க தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், ராஜதானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபக் தலைமையில் தனிப்படை அமைத்தார். இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வீரக்குமாரை கைது செய்ய பாலக்கோம்பை சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த வீரக்குமார் தப்பி ஓடி அங்குள்ள கரும்பு காட்டுக்குள் பதுங்கி கொண்டார். போலீசார் கரும்பு காட்டை சுற்றி வளைத்து ½ மணி நேர போராட்டத்திற்கு பின் வீரக்குமாரை கைது செய்தனர்.

மற்றொருவரான அஜித்குமார் கேரளாவிற்கு தப்பி சென்று விட்டார். இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story