சூறாவளி காற்றால் சேதமடைந்த மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
சூறாவளி காற்றால் சேதமடைந்த மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- பசுமைக்குடில் அமைக்க வழங்கப்பட்ட வந்த மானிய தொகை ஏக்கருக்கு ரூ.18 லட்சத்தில் இருந்து, ரூ.16 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். பொங்கல் திருநாளில் கிராமங்கள் தோறும் மாடு, ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு பூஜை செய்து, ஊர்வலமாக அழைத்து செல்வது வழக்கம். இந்த நடைமுறை பல ஆண்டுகளாக உள்ள நிலையில், காவல்துறையினர் கால்நடைகளை ஊர்வலமாக அழைத்து செல்ல கூடாது என கெடுபிடி காட்டி வருகின்றனர்.
போச்சம்பள்ளி பகுதியில் சூறாவளி காற்றால் தென்னை, மாமரங்கள் முறிந்து விழுந்து ஒரு ஆண்டுகள் கடந்து இன்னும் இழப்பீடு வழங்கவில்லை. தென்னை, மாமரங்களில் காய்கள், பயிர்களை சேதப்படுத்தி வரும் குரங்குகளை பிடித்து வனத்துறையினர் காட்டிற்குள் விட வேண்டும். இல்லாவிட்டால், வனத்தை ஆக்கிரமித்து மரங்களை வெட்டுவோம். தேசிய, கூட்டுறவு வங்கிகளில் வங்கிக்கடன் பெற்றுள்ள விவசாயிகளிடம் கடன் வசூல் செய்வதில் வங்கி அதிகாரிகள் அதிக அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
மேலும், குற்றவாளிகளை தேடுவது போல் விவசாயிகளை தேடுகின்றனர். மாவட்டத்தில் மழையின்றி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீருக்கே தட்டுப்பாடு உள்ளது. எனவே, நாடாளுமன்ற தேர்தல் வரை வங்கிக்கடன் வசூல் செய்வது நிறுத்த வேண்டும். தீர்த்தகிரி வலசை ஏரி கால்வாய் அகலப்படுத்த வேண்டும். ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். காட்டாகரம் ஏரியில் இருந்து குள்ளம்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் கால்வாய் அமைக்க வேண்டும்.
வனத்தை ஒட்டி வசிக்கும் விவசாயிகளுக்கு யானைகள் நிலத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சிகள் அளிக்க வேண்டும். காட்டேரி, மாரசந்திரம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கெலவரப்பள்ளி அணையில் இருந்து செல்லும் பாசன கால்வாய்கள் தூர்வாரி, கடைமடைக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.
தொடர்ந்து விவசாயிகளுக்கு பதில் அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி பேசியதாவது:- பசுமைக்குடில் மானியம் உயர்த்தி வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்ட தென்னை, மாமரங்களுக்கு இழப்பீடு விரைவில் வழங்கப்படும். குரங்குகள் தொல்லை செய்யும் 9 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டு, 200 குரங்குகளுக்கு மேல் காட்டில் விடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வனத்துறை - விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன் விஜயகுமார், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நந்தகோபால், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நடராஜன், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எம்.ராமகவுண்டர் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story