கோழிகளுக்கு குளிர்கால நோய்களின் தாக்கத்தை குறைக்க மேலாண்மை முறைகளை கையாள வேண்டும் ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
கோழிகளுக்கு குளிர்கால நோய்களின் தாக்கத்தை குறைக்க தகுந்த குளிர்கால மேலாண்மை முறைகளை கையாள வேண்டும் என பண்ணையாளர்களுக்கு ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இன்று முதல் 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. அதேபோல் இன்று, நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி கிழக்கில் இருந்து காற்று வீசும். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வடக்கில் இருந்து காற்று வீசும். இன்று 4 கி.மீட்டர் வேகத்திலும், நாளை முதல் 3 நாட்களுக்கு 6 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசும்.
வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 91.4 டிகிரியும், குறைந்தபட்சமாக 64.4 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 85, 85, 85, 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 55, 50, 45, 45 சதவீதமாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலையை பொறுத்தவரையில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மேகமூட்டத்துடன், பனி மூட்டமும் கொண்ட வானிலையே நிலவும். கோழிகளில் இத்தகைய வானிலை, தீவன எடுப்பை உயர்த்திவிடும். முட்டையின் எடை கூட வாய்ப்பு உள்ளதால், வயதான கோழிகளுக்கான தீவனத்தில் வைட்டமின் ‘டி’ சேர்த்து, முட்டை உடைவை தடுத்துக்கொள்ள வேண்டும். பகல் வெளிச்ச நேரம் குறைந்து வருவதால், புரூடர் குஞ்சுகளுக்கு செயற்கை ஒளி அவசியமாகிறது.
கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும்்் இறக்கை அழுகல் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளர்கள் கோழிக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளான கிளாஸ்டிரியம், ஸ்டெப்லோகாக்கஸ் ஆகியவற்றின் தாக்கம் உள்ளதா? என கண்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் சிறந்த தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். மேலும் குளிர்கால நோய்களின் தாக்கத்தை குறைக்க தகுந்த குளிர்கால மேலாண்மை முறைகளையும் கையாள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story