விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் வாழைக்கன்றுகளுடன் ஆர்ப்பாட்டம்
விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வாழைக்கன்றுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குமாரபாளையம்,
விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதற்கு பதிலாக சாலையோரங்களில் புதைவட கம்பிகளை பதிக்கும் திட்டத்தை செயல்படுத்திட வலியுறுத்தியும், ஏற்கனவே உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பிற்கேற்ப முறையான இழப்பீடு வழங்கிட வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு சாமாண்டூர் பகுதியில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் நடைபெற்றுவரும் உண்ணாவிரதப் போராட்டம், பெருமாள் தலைமையில் நேற்று 6-வது நாளாக நடைபெற்றது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டனர். காலை 11 மணி அளவில் விவசாயிகள் வாழைக்கன்றுகள், செடிகளை தூக்கிப்பிடித்தவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. தங்கவேலு ,பாட்டாளி மக்கள் கட்சியின் விவசாய பிரிவான தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் தலைவர் ஆலயமணி, பா.ம.க. துணை பொதுச் செயலாளர் பொன்னுசாமி, அமைப்பு செயலாளர் பழனிவேல், மாவட்ட செயலாளர் சரவணராஜ், முத்துசாமி ஆகியோர் நேரில் வந்து தொடர் உண்ணாவிரதம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.
நேற்று சங்ககிரி அருகே உள்ள சுண்ணாம்புக்குட்டை பகுதியில் விவசாய நிலங்களில் மின்சாரகோபுரம் அமைக்க அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து திருப்பி அனுப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story