மாவட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு ரூ.624 கோடி வங்கி கடன் கலெக்டர் ரோகிணி தகவல்
சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் மகளிர் குழுக்களுக்கு ரூ.624 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
சேலம்,
தமிழக அரசின் மகளிர் திட்டத்தின் மூலம் செயல்படும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தேசிய அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கைவினைஞர்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி சேலம் போஸ் மைதானத்தில் தொடங்கியது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டார். தொடர்ந்து கலெக்டர் ரோகிணி பேசும் போது கூறியதாவது:-
தேசிய அளவிலான மகளிர் குழுக்களின் கைவினை பொருட்கள், ஆயத்த ஆடைகள், பேன்சி செயற்கை ஆபரணங்கள், பட்டு அலங்கார பொருட்கள், இயற்கை உணவு பொருட்கள், மரச் சிற்ப சிலைகள், சுவையான உணவு வகைகள், சிறு தானிய உணவு பொருட்கள் மகளிர் உற்பத்தி பொருட்கள் ஆகியவை இந்த கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சி வருகிற 3-ந் தேதி வரை நடைபெறும். கண்காட்சியை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். மகளிர் திட்டம் மூலம் பல்வேறு வகைகளில் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தான் கிராம, நகர்புற பெண்கள் சுயமாக தொழிலில் ஈடுபட்டு சம்பாதிக்க முடிந்தது. தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்து பல்வேறு உற்பத்தி பொருட்களை சந்தைக்கு கொண்டு வந்தனர்.
மகளிர் திட்டத்தை வாழ்வாதார மேம்பாடு என்ற நோக்கில் இருந்து தொழில் முனைவோர் என்ற தளத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு தேவையான தொழிற் பயிற்சிகள், வேலை வாய்ப்பு பயிற்சிகள், கடன் உதவி என பல்வேறு துறைகளோடு சேர்ந்து பலதரப்பட்ட பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்துதரப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் கீழ் மொத்தம் 9 ஆயிரத்து 750 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 8,225 குழுக்கள் ஊரக பகுதியிலும், 1,525 குழுக்கள் நகர்புறத்திலும் செயல்படுகிறது. இவர்களுக்கு நடப்பாண்டுக்கு ரூ.624 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மகளிர் குழுவின் உற்பத்தி பொருட்களுக்கு ‘சேல்மா’ என்ற வணிக குறியீடு உருவாக்கி அனைத்து மகளிர் உற்பத்தி பொருட்களும் ‘சேல்மா’ என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.
முன்னதாக 107 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.16 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான சுழல் நிதியை மாவட்ட கலெக்டர் ரோகிணி வழங்கினார். நிகழ்ச்சியில் செம்மலை எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், ஆவின் பொது மேலாளர் குமரேசன், திட்ட இயக்குனர் செல்வகுமார், உதவி திட்ட அலுவலர் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story