ஆரல்வாய்மொழி பகுதியில் குறி சொல்வதாக தாய்- மகனிடம் பணம் பறித்தவர் சிக்கினார் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்


ஆரல்வாய்மொழி பகுதியில் குறி சொல்வதாக தாய்- மகனிடம் பணம் பறித்தவர் சிக்கினார் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 29 Dec 2018 4:30 AM IST (Updated: 29 Dec 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி பகுதியில் குறி சொல்வதாக தாய்- மகனிடம் பணம் பறித்தவர் சிக்கினார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஆரல்வாய்மொழி, 

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த ஒரு வாரமாக வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். அவர், ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றார். அந்த வீட்டில் தாயும், மகனும் இருந்தனர். அவர்களிடம், உங்கள் வீட்டில் பிரச்சினைகள் அதிகமாக உள்ளது.

அதற்கு காரணம், உங்கள் வீட்டில் பில்லிசூனியம் வைக்கப்பட்டுள்ளது. அதுவும் தகடு வடிவில் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினாராம். அதனை எடுத்தால் தான் பிரச்சினைகள் தீரும் என்று குறி சொன்னதாக கூறப்படுகிறது. முதலில் அந்த நபரின் பேச்சை, தாயும், மகனும் நம்பவில்லை. தொடர்ந்து அந்த நபர், அவர்களிடம் வசீகரமாக பேசி நம்ப வைத்தார். நான் கூறுவது பொய் என்றால் நீங்கள் பணம் தர வேண்டாம் என்றும் அந்த நபர் கூறினார்.

இதையடுத்து அந்த நபரை தாயும்- மகனும் வீட்டுக்குள் அனுமதித்தனர். அந்த நபர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரும்படி கூறினார். அவர்கள் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தனர். அதில் குங்குமத்தை கலந்தார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் தான் வைத்திருந்த தகடை அந்த தண்ணீருக்குள் போட்டார். சிறிது நேரம் கழித்து ஏதோ வார்த்தைகளை உச்சரித்து விட்டு அந்த பாத்திரத்தில் இருந்து தான் போட்ட தகடை எடுத்து கொடுத்தார்.

அதன்பிறகு தாய்- மகன் இருவரிடமும் தந்திரமாக பேசி ரூ.1,500-ஐ வாங்கினார். அங்கிருந்து நைசாக தப்பிச் சென்றார். அந்த நபர் சென்ற சிறிது நேரம் கழித்துதான் ஏமாற்றப்பட்டதை தாயும்- மகனும் உணர்ந்தனர்.

இதற்கிடையே நேற்று அந்த நபர் செண்பகராமன்புதூர் பகுதியில் வீடு வீடாக சென்று குறி சொல்வதாக கூறி வந்தார். இதனை அறிந்த தாயும்- மகனும் தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரத்திடம் கூறினார்கள். அவர் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சூளக்கரை பகுதியை சேர்ந்த விக்ரம் (வயது 28) என்பது தெரிய வந்தது. இவர் ராஜாவூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து சுற்றுவட்டார பகுதியில் குறி சொல்வதாகவும், பில்லி சூனியம் எடுப்பதாகவும் கூறி பணம் பறித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து விக்ரம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story