கன்னியாகுமரி கடலில் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை
கன்னியாகுமரி கடலில் ரத்த காயங்களுடன் வாலிபர் பிணம் மிதந்து வந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீசார், அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி,
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தற்போது அய்யப்ப பக்தர்களின் சீசன் காலம் ஆகும். சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். அத்துடன், பள்ளி அரையாண்டு விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக கன்னியாகுமரிக்கு வருகிறார்கள். நேற்று அதிகாலை முதல் கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
இந்தநிலையில், நேற்று காலை 10 மணியளவில் சன்செட் பாயிண்ட் கடற்கரையில் சில சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அப்போது, கடலில் பாறைகளுக்கு இடையே ஒரு வாலிபரின் பிணம் அலையில் மிதந்தபடி வந்தது. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், வீரமணி, சுடலைமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கடலில் மிதந்து கொண்டிருந்த வாலிபரின் பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இறந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும். பிணத்தின் முகம், கை, கால்களில் ரத்த காயம் இருந்தது.
இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து பிணத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் கடலில் இறங்கிய போது அலையில் இழுத்து செல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து பிணத்தை கடலில் வீசி சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் கன்னியாகுமரி கடற்கரையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story