இரவிபுதூர்கடையில் துணிகரம்: டிராவல் ஏஜென்சி உள்பட 2 இடங்களில் கொள்ளை கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் போலீஸ் விசாரணை


இரவிபுதூர்கடையில் துணிகரம்: டிராவல் ஏஜென்சி உள்பட 2 இடங்களில் கொள்ளை கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 29 Dec 2018 4:00 AM IST (Updated: 29 Dec 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

இரவிபுதூர்கடையில் டிராவல் ஏஜென்சி மற்றும் கடையில் ஷட்டர்களை உடைத்து செல்போன்கள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருவட்டார், 

இந்த துணிகர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

திருவட்டார் அருகே செறுகோல் சிட்டாவிளையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது47). இவர் இரவிபுதூர்கடையில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் செல்போன் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்த பின்பு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலையில் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடப்பதை பக்கத்து கடைக்காரர்கள் பார்த்து சுரேசுக்கு தகவல் கொடுத்தனர். சுரேஷ் கடைக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். அப்போது, கடையில் உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், கடையில் இருந்த விலை உயர்ந்த 2 செல்போன்கள், ரூ. 30 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளையடிக்கப் பட்டிருந்தன.

இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, அங்கு பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் சுமார் 40 வயதுடைய ஒரு நபர் முகத்தை மூடிய நிலையில் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து செல்போன், பணத்தை கொள்ளையடித்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இந்த கடையின் அருகே காஞ்சாம்புரம் பகுதியை சேர்ந்த சேம்சுஜித் (25) என்பவர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். அதன் ஷட்டர் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.57 ஆயிரம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. செல்போன் கடையில் கொள்ளையடித்த மர்ம நபர்தான் தனியார் நிறுவனத்திலும் கைவரிசை காட்டியுள்ளார்.

சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சம்பவங்கள் தொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகிறார்கள். கடை மற்றும் டிராவல் ஏஜென்சியில் செல்போன்கள், ரூ.87 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story