ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து பா.ஜனதாவை முறியடிக்க வேண்டும் பெருந்துறையில் டி.ராஜா பேட்டி


ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து பா.ஜனதாவை முறியடிக்க வேண்டும் பெருந்துறையில் டி.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 29 Dec 2018 4:00 AM IST (Updated: 29 Dec 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து பா.ஜனதாவை முறியடிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பெருந்துறையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார்.

பெருந்துறை, 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் பெருந்துறையில் நேற்று முன்தினம் தொடங்கி இன்று (சனிக்கிழமை) வரை நடக்கிறது. நேற்று 2-வது நாள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் வந்திருந்தனர்.

அப்போது டி.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் குறித்து பெருந்துறையில் நடைபெறும் இந்த குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தவுள்ளோம். மதச்சார்பற்ற ஆட்சி மத்தியில் அமைவதே எங்கள் குறிக்கோள். மோடியின் 5 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வரும் வேளையில், இந்த ஆட்சி பற்றி நிறைவாக எதையும் கூற முடியவில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மையை காப்பாற்ற பா.ஜனதாவை தோற்கடியுங்கள். இதற்காக இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகள், ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து பா.ஜனதாவை முறியடிக்க வேண்டும்.

பிரதமர் வேட்பாளர் யார்? என்பது தற்போதைய பிரச்சினை இல்லை. மோடியின் ஆட்சியை அகற்றுவதே எங்களது குறிக்கோளாகும். ஒவ்வொருவருக்கும் கருத்துரிமை உள்ளது. அதன்படி, ஸ்டாலின் தனது கருத்தை கூறியிருக்கிறார்.

3-வது அணி உருவாகுமா? என்கிற கேள்விக்கு இப்போது பதில் சொல்ல முடியாது. அனுமானத்தால் எதையும் கூற இயலாது. எங்களின் பொதுவான நோக்கம் மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வரக்கூடாது. அது அகற்றப்படவேண்டும். மதச்சார்பற்ற இடதுசாரி கட்சிகள் இதற்கு முயற்சி செய்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, ஈரோடு மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் திருநாவுக்கரசு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நா.பெரியசாமி(பெருந்துறை), சுப்பராயன் (திருப்பூர்), பெருந்துறை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் தெய்வசிகாமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story