ஈரோட்டில் 110 அரங்குகளுடன் விவசாயம் - பால் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி


ஈரோட்டில் 110 அரங்குகளுடன் விவசாயம் - பால் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி
x
தினத்தந்தி 29 Dec 2018 3:15 AM IST (Updated: 29 Dec 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் 110 அரங்குகளுடன் விவசாயம் மற்றும் பால் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.

ஈரோடு,


யுனைட்டட் டிரேட் பேர்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையில் உள்ள தூரத்தை குறைக்க, தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான விவசாயம் மற்றும் பால் உற்பத்தி கண்காட்சி ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள பரிமளம் மஹாலில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் மனோஜ்குமார் தலைமை தாங்கினார். பாக்கியராஜ் முன்னிலை வகித்தார்.

விவசாயிகள் சபீர், அருணாச்சலம், குருமூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள். வியட்நாம் நாட்டை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி ப்யூ டிரஸ் தவுங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதுகுறித்து கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் மனோஜ்குமார், பாக்கியராஜ் ஆகியோர் கூறியதாவது:-

தற்போது சந்தையில் இருக்கும் நவீன வேளாண் தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்த முடியும் என்பதை தெரிவிப்பதே இந்த கண்காட்சியின் நோக்கம் ஆகும். கண்காட்சியில் மொத்தம் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. தொழில்நுட்ப அறைகள், பவர் டில்லர்ஸ், சோலார் மோட்டார்கள், பம்புகள், பைப்கள், சொட்டுநீர்ப்பாசன அமைப்பு, அறுவடை எந்திரம், விதைகள், உரங்கள் உட்பட பல வேளாண்மை சார்ந்த தொழில்நுட்ப சாதனங்கள் இடம் பெற்றுள்ளன.

இயற்கை உரம், சிறு தானிய வேளாண்மை மற்றும் தோட்டக்கலை புத்தகங்கள் போன்ற தொழில்நுட்பம் அல்லாத பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. கண்காட்சியில் அமைக்கப்பட்டு உள்ள அரங்குகளில் பம்புகள், விளக்குகள், மோட்டார்கள் போன்ற சோலார் பொருட்களும் உள்ளன. விவசாயத்தில் பயன்படுத்த முடிந்த சோலார் பொருட்களுக்கு அரசு மானியம் வழங்கப்படுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story