போலீசார் ஒருவரையொருவர் குறை கூறுவதை நிறுத்த வேண்டும் பயிற்சி முகாமில் மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ பேச்சு
போலீசார் ஒருவரையொருவர் குறை கூறுவதை நிறுத்த வேண்டும் என பயிற்சி முகாமில் மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ பேசினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றும் போலீசாருக்கு மன அழுத்தம் குறைப்பதற்கான நிறைவாழ்வு பயிற்சி முகாம் ஆயுதப்படை மண்டபத்தில் கடந்த 21-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூருவில் உள்ள தேசிய மூளை ஆரோக்கியம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தில் பயிற்சி பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சத்தியபாமா, யோகா பயிற்சியாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு போலீசாருக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
பயிற்சியை மத்திய மண்டல ஐ.ஜி.வரதராஜூ பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
முதலில் மன அழுத்தம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். கோபம் கொள்ள கூடாது. கோபத்தினால் தூக்கமின்மை போன்ற பல பிரச்சினைகள் ஏற்படும். காவல் துறையில் மன அழுத்தம் என்பது ஒரு மாயை. காவல் துறையில் பணிகள் ஒரே மாதிரி இருக்காது. காலையில் ஒரு பணி, மாலையில் ஒரு பணி என பல பணிகள் இருக்கும். இதற்கு தகுந்தாற்போல் நாம் நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும். குறிப்பாக எதிர்பாராத பணிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
குடும்ப சூழல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் நமக்கு கிடைத்த நேரத்தை தகுந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கோவிலுக்கு செல்வது, நண்பர்களுடன் பேசுவது, பாட்டு கேட்பது, படங்கள் பார்ப்பது என அவரவர்களுக்கு பிடித்தை செய்து கொள்ள வேண்டும். முதலில் போலீசார் ஒருவரை யொருவர் குறை கூறுவதை நிறுத்த வேண்டும். ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அதை பற்றி பேசாமல் அந்த பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என யோசிக்க வேண்டும். ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கண்டிப்பாக இருக்கும். அதனை நோக்கி நாம் நகர வேண்டும்.
மன அழுத்தத்தை போக்க யோகா, தியானம், ஆன்மிகம் போன்றவற்றை நாடலாம். பயிற்சி பெற்றால் மட்டும் நன்மை கிடைக்காது. பயிற்சியின் போது நாம் தெரிந்து கொண்டதை தொடர்ந்து போலீசார் கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் முழுமையாக நீங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்கோவன், அன்பழகன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story