யூனியன் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
சங்கரபாண்டியபுரம் பகுதியில் இடியும் நிலையில் உள்ள சுகாதார வளாகத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதிக்குட்பட்ட சங்கரபாண்டியபுரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி பொதுமக்களுக்காக 4 சுகாதார வளாகங்கள் கட்டி தரப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தன. இந்நிலையில் நாளடைவில் இக்கட்டிடங்கள் ஒவ்வொன்றாக சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் இக்கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கழிப்பறைகள் கட்டி தர வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மாத்தூரான் கூறியதாவது:-
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி பெண்கள் பொதுமக்களில் பெரும்பாலானோர் பொது கழிப்பறைகளைத்தான் பயன்படுத்தி வந்தனர்.தற்போது 4 கட்டிடங்கள் இருந்தாலும் அது பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இவை இடிந்து விழும் நிலையில் உள்ளன. கடந்த ஆண்டு ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.1 லட்சத்தை புதிய கழிப்பறை கட்டும் திட்டத்தில் வழங்கி உள்ளோம்.
இதுவரை புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை ஏதும் இல்லை, திறந்த வெளியை பொதுமக்கள் பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது. எனவே ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.விரைவில் புதிய கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்காத நிலையில் அடுத்த கட்டமாக உண்ணாவிரத போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஓரிரு வாரங்களுக்குள் கழிப்பறை கட்டிடங்களில் ஆழ்குழாய் அமைத்தும், மறு சீரமைப்பு செய்து தர நடவடிக்கை எடுப்பதாகவும், புதிய கழிப்பறை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story