புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்


புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 28 Dec 2018 11:00 PM GMT (Updated: 28 Dec 2018 8:42 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேளாங்கண்ணி,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் நாகை மாவட்டம் கீழையூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் கண்ணையன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய தலைவர் செல்லையன், செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் பாலாஜி வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரமும், காவிரி டெல்டா விவசாயிகள் தொடர்ந்து வறட்சி, வெள்ளம், புயல் என்று பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரமும் இழப்பீடு வழங்கிட வேண்டும். கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். 2017-18-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் வருகிற 5-ந்தேதி கீழையூர் ஒன்றியம் மற்றும் அனைத்து ஊராட்சிகளிலும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் பிரமானந்தம், செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலாஜி, பரமசிவம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கண்ணதாசன், துரைசாமி, மாசேத்துங், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story