திப்பம்பட்டி மாட்டுச்சந்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து சப்-கலெக்டர் அலுவலகத்தில் தி.மு.க.வினர் முற்றுகை


திப்பம்பட்டி மாட்டுச்சந்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து சப்-கலெக்டர் அலுவலகத்தில் தி.மு.க.வினர் முற்றுகை
x
தினத்தந்தி 28 Dec 2018 10:15 PM GMT (Updated: 28 Dec 2018 9:40 PM GMT)

திப்பம்பட்டி மாட்டு சந்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் கடந்த 25-ந்தேதி மாட்டு சந்தை தொடங்கப்பட்டது. இதை கண்டித்து சப்-கலெக்டர் அலுவலகத்தை தி.மு.க. நகர பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் தலைமையில் நேற்று தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர். அப்போது பொள்ளாச்சி மாட்டு சந்தையை பிளவுப்படுத்தி, திப்பம்பட்டிக்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.அதனை தடுத்து நிறுத்த கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், மனு கொடுக்க தான் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்வோம் என்றார். இதையடுத்து தி.மு.க.வினர் முற்றுகையை கைவிட்டு, சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் சியாமளாவிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி மாட்டு சந்தை மிகவும் பாரம்பரியமானது. இந்த சந்தை மூலம் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.70 லட்சம் வருவாய் கிடைக்கின்றது. மேலும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் இதை சார்ந்த இதர வியாபாரிகளும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சந்தையை பிரித்து திப்பம்பட்டிக்கு மாற்றி, அங்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் சந்தை நடத்த அரசு அனுமதி, ஊராட்சி அனுமதி பெறவில்லை. அங்கு அடிப்படை வசதி இல்லாமல் புதிதாக சந்தை உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் பொள்ளாச்சி நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும் சூழல்நிலை உருவாகி உள்ளது. இதனால் நகராட்சி பகுதியில் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்ற இயலாத நிலையும் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து பொள்ளாச்சியில் இயங்கி வரும் மாட்டு சந்தையை பிளவுப்படுத்தும் செயலை தடுக்க வேண்டும். புதிதாக திப்பம்பட்டியில் மாட்டு சந்தை உருவாகும் நிலையை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து எம்.எல்.ஏ. அலுவலகம் அல்லது திப்பம்பட்டியில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

முற்றுகையில் நகர அவைத்தலைவர் பழனிசாமி, துணை செயலாளர்கள் கார்த்தியேன், விஜயா, நாச்சிமுத்து, பொருளாளர் சாந்து முகமது, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் லட்சுமி நாச்சிமுத்து, நிர்வாகிகள் நவநீதகிருஷ்ணன், கண்ணன், தர்மராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story