அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் தப்பு அடித்து விவசாயிகள் போராட்டம்


அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் தப்பு அடித்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 28 Dec 2018 10:45 PM GMT (Updated: 28 Dec 2018 10:03 PM GMT)

அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தப்பு அடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாறன் தலைமையில் தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட செயலாளர் சக்திவேல், ஒன்றிய தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் விவசாயிகள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தப்பு அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாறன் கூறுகையில், “பல மாநிலங்களில் விவசாய கடன்கள் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் கடன் தள்ளுபடி செய்யவில்லை. எனவே கூட்டுறவு கடன், தேசிய வங்கிகளில் வாங்கிய கடன், சுய உதவிக்குழு கடன், கல்விக்கடன் என அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

நெல், தென்னை, கரும்பு உள்பட பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

கரும்புக்கான நிலுவைத்தொகையை வழங்காத கூட்டுறவு சர்க்கரை மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளை கண்டிப்பதுடன், நிலுவைத்தொகைகளை உடனே வழங்க வேண்டும். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை கடந்த 2 மாதமாக கூட்டாமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.


Next Story