உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றுக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்தது; 2 நண்பர்கள் பலி
உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றுக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்ததில் 2 நண்பர்கள் பலியானார்கள். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
விழுப்புரம்,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் தட்சிணாமூர்த்தி (வயது 20). இவரும், அதே கிராமத்தை சேர்ந்த கிளியானந்தன் மகன் பாலாஜியும்(20) நண்பர்கள். இவர்கள் இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கிளியூரில் இருந்து ரகுநாதபுரத்துக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை தட்சிணாமூர்த்தி ஓட்டினார். ரகுநாதபுரம் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்புக்கட்டையில் மோதி, சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் 2 பேரும், மோட்டார் சைக்கிளுடன் தண்ணீரில் மூழ்கினர்.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது கிணற்றில் மூழ்கி பலியான தட்சிணாமூர்த்தியும், பாலாஜியும் பிணமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story