திருச்சி விமான நிலையத்தில் ரூ.8 லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல் - 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை


திருச்சி விமான நிலையத்தில் ரூ.8 லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல் - 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 29 Dec 2018 4:20 AM IST (Updated: 29 Dec 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமானநிலையத்தில் ரூ.8 லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செம்பட்டு,

திருச்சி விமானநிலையத்தில் இருந்து உள்நாட்டில் பல்வேறு நகரங்களுக்கும் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை, சவுதிஅரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமானம் நிலையம் வழியாக தங்கம் கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில் விமானநிலையத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை வான்நுண்ணறிவுபிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

அப்போது சென்னையை சேர்ந்த முகமதுஇப்ராகிம் (வயது 57) என்பவர் தனது உடைமையில் வைத்து 160 கிராம் எடையுள்ள தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 83 ஆயிரம் இருக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேபோல் அதேவிமானத்தில் வந்த மற்றொரு பயணியான ராமநாதபுரத்தை சேர்ந்த சையது இப்ராகிம்ஷா (28) என்பவரும் 100 கிராம் எடையுள்ள தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதையடுத்து 2 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.8 லட்சம் மதிப்பு தங்கநகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பிடிபட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story