பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் தினேஷ் குண்டுராவ் பேச்சு


பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் தினேஷ் குண்டுராவ் பேச்சு
x
தினத்தந்தி 29 Dec 2018 5:15 AM IST (Updated: 29 Dec 2018 5:15 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.

பெங்களூரு,

காங்கிரஸ் நிறுவப்பட்ட நாள் விழா பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் கலந்துகொண்டு, அலங்கரித்துவைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் தினேஷ் குண்டுராவ் பேசியதாவது:-

சமீபத்தில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதில் ராகுல் காந்தியின் உழைப்பு முக்கியமானது. அவரது திடமான தலைமை பண்பும் ஒரு காரணம் ஆகும்.

பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர், விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறார்கள். அதனால் தான் பா.ஜனதாவுக்கு எதிராக செயல்பட எதிர்க்கட்சிகள் பயப்படுகின்றன. காங்கிரஸ் இல்லாத தேசத்தை உருவாக்குவோம் என்று பா.ஜனதாவினர் முழங்கினார்கள். அந்த முழக்கம், காங்கிரஸ் வெற்றி மூலம் காணாமல் போய்விட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை தக்க வைக்க போராடும் நிலை பா.ஜனதாவுக்கு வந்துள்ளது. மத்தியில் பா.ஜனதா அல்லாத அரசு அமைந்தால், மோடி, அமித்ஷா ஆகியோரின் நிலை என்னவாகும் என்பதை ெபாறுத்திருந்து பாருங்கள்.

பா.ஜனதா இல்லாத தேசத்தை உருவாக்குவோம் என்று சொல்ல மாட்டோம். பா.ஜனதா இருக்க வேண்டும். ஆனால் மோடி, அமித்ஷா இருக்கும் பா.ஜனதா வேண்டாம். இத்தகைய பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.

காங்கிரஸ் இல்லாத தேசத்தை உருவாக்க முடியாது. ஒருவேளை சிறிது அளவுக்கு அந்த நிலை ஏற்பட்டால், ஊடகங்களின் சுதந்திரம் பறிக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும். அதன் மூலம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் பேசினார்.

விழாவில் காங்கிரஸ் தேர்தல் பிரசார குழு தலைவர் எச்.கே.பட்டீல், மந்திரி எம்.பி.பட்டீல், முன்னாள் மந்திரி ராமலிங்கரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story