திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மூடாவிட்டால் போராட்டம் தொடரும் அமைதி பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் எச்சரிக்கை


திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மூடாவிட்டால் போராட்டம் தொடரும் அமைதி பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 Dec 2018 6:14 AM IST (Updated: 29 Dec 2018 6:14 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியை மூடாவிட்டால் போராட்டம் தொடரும் என்று அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் நேற்று முன்தினம் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா, பேரன் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதற்கு காரணம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு மணல் எடுத்ததால்தான் பெருமளவு பள்ளம் ஏற்பட்டு இருவர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆகையால் மணல் குவாரியை மூட வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் கொள்ளிடம் நீர் பாதுகாப்பு குழு நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். இதுதொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்யநாராயணன், தாசில்தார் முத்துலட்சுமி, பொதுப்பணித்துறை பொறியாளர் தர்மலிங்கம், துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர் மேனகா ஆகியோர் கலந்து கொண்டு, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் பொதுமக்கள் கூறுகையில், இறந்தவர்களின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் விதிகளை மீறி அமைக்கப்பட்ட மணல் குவாரியை உடனடியாக மூட வேண்டும் என்றனர். கோட்டாட்சியர் சத்தியநாராயணன் கூறுகையில், இதை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என்றார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒவ்வொருமுறை பேச்சுவார்த்தையின் போதும் இதே பதிலைத்தான் கூறுகிறீர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. ஆகையால் நாளை (இன்று) மீண்டும் மணல் குவாரி செயல்பட்டால் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வெவ்வேறு பகுதிகளில் சாலை மறியல் ஈடுபடுவோம் என பகிரங்கமாக அறிவித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையொட்டி திருமானூர் பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story