தர்மபுரி அருகே தாய்-மகள் மர்ம சாவு தற்கொலையா? போலீசார் விசாரணை


தர்மபுரி அருகே தாய்-மகள் மர்ம சாவு தற்கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Dec 2018 4:15 AM IST (Updated: 30 Dec 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே தாய் தூக்கில் தொங்கியும், மகள் தீயில் கருகியும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி,


தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள புழுதிக்கரை காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் பழனி. கிரேன் ஆப்ரேட்டர். இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 40). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். இதில் மூத்த மகள் திவ்யாலட்சுமி (17). இவர் அந்த பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். பழனி வேலை விஷயமாக வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது. மற்ற 2 குழந்தைகளும் அருகே உள்ள தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேஸ்வரியும், திவ்யாலட்சுமியும் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை நீண்ட நேரமாகியும் 2 பேரும் கதவை திறந்து வெளியே வரவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் திவ்யாலட்சுமி தீக்காயங்களுடன் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது அருகே மகேஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதைகண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி துடித்தனர். இவர்களின் சத்தம் கேட்டு குடும்பத்தினர், உறவினர்கள் விரைந்து வந்து தாய்-மகள் ஆகிய 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த கிருஷ்ணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற 2 பேரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாய் தூக்கில் தொங்கிய நிலையிலும், மகள் தீயில் கருகியும் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் அங்கே நடந்தது என்ன? என்ற குழப்பம் போலீசாருக்கு ஏற்பட்டது.

காதல் விவகாரம் அல்லது குடும்ப பிரச்சினையால் திவ்யாலட்சுமியை தீவைத்து கொளுத்தி விட்டு தாய் மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Next Story