கிணறு தூர்வாரும் பணியின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு 2 பேர் படுகாயம்
மாரண்டஅள்ளி அருகே கிணறு தூர்வாரும் பணியின் போது மின் மோட்டாரை மேலே தூக்கியதில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள நல்லாம்பட்டியை சேர்ந்தவர் சுதாகர். விவசாயியான இவர் தனது கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த பணியில் பஞ்சப்பள்ளி அருகே உள்ள சின்னுகவுண்டனஅள்ளி கிராமத்தை சேர்ந்த குப்புசாமி (வயது47), மாதையன்(47), பெரியானூரை சேர்ந்த முத்து(23), பஞ்சப்பள்ளி அடுத்த புளியம்பட்டியை சேர்ந்த சுந்தரேசன்(40), குஞ்சாரஅள்ளியை சேர்ந்த முனியப்பன் (27) ஆகிய 5 பேரும் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று தொழிலாளர்கள் அனைவரும் கிணற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குப்புசாமி, முனியப்பன், சுந்தரேசன் ஆகிய 3 பேரும் மேலே இருந்து கிணற்றில் உள்ள மின் மோட்டாரின் வயரை பிடித்து தூக்கினர். அப்போது குப்புசாமி உள்ளிட்ட 3 பேரையும் திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது குப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முனியப்பன், சுந்தரேசன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த முத்து, மாதையன் ஆகியோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த குப்புசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story