அதிகாரி இடமாற்றம் தேன்கனிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு பொதுமக்கள் பாதிப்பு


அதிகாரி இடமாற்றம் தேன்கனிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு பொதுமக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 30 Dec 2018 4:00 AM IST (Updated: 30 Dec 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் கிராம நிர்வாக அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

தேன்கனிக்கோட்டை, 


கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை நகர கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் முருகன். இவர் கடந்த, 24-ந் தேதி அஞ்செட்டி தாலுகா, நாட்றாம்பாளையம் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான ஆணையை கிராம நிர்வாக அலுவலர் முருகன் வாங்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனால் தேன்கனிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் தாசில்தார் வெங்கடேசன் சார்பில் இடமாற்ற ஆணை ஒட்டப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது. இதையடுத்து கடந்த 5 நாட்கள் ஆகியும் கிராம நிர்வாக அலுவலர் முருகன் நாட்றாம்பாளையத்திலும் பொறுப்பேற்கவில்லை.

தேன்கனிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலகம் கடந்த 5 நாட்களாக பூட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெற முடியாமல் சிரமப்படுகிறார்கள். தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு சென்றபோது கிராம நிர்வாக அலுவலர் முருகனுக்கும், அங்கு பணிபுரிந்த சிலருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story