ராசிபுரம் நகராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க பூமி பூஜை அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர் சரோஜா அடிக்கல் நாட்டினர்


ராசிபுரம் நகராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க பூமி பூஜை அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர் சரோஜா அடிக்கல் நாட்டினர்
x
தினத்தந்தி 30 Dec 2018 4:30 AM IST (Updated: 30 Dec 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் நகராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க பூமிபூஜை நடந்தது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர் சரோஜா ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.

ராசிபுரம், 

ராசிபுரம் நகராட்சி எல்லப்பா காலனியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கவும், மழைநீர் வடிகால் வசதியுடன் சாக்கடை கால்வாய் கட்டும் பணி மற்றும் சின்னக்கடை வீதியில் சமுதாய கூடம் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டு விழா ராசிபுரம் கதர் கடை அருகில் நடந்தது. விழாவிற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை தாங்கினார். பி.ஆர்.சுந்தரம் எம்.பி., முன்னாள் நகரசபை தலைவரும், நகர கூட்டுறவு வங்கித் தலைவருமான பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.


விழாவில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

ஏற்கனவே ராசிபுரம் நகராட்சி பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் சாலையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் தார்சாலை போடப்பட்டு உள்ளது. தற்போது ரூ. 3 கோடி மதிப்பீட்டில் வடிகால் வசதியுடனும், சாலை அமைக்கப்படும். மற்ற பகுதிகளில் தார்சாலை அமைக்க ரூ.30 கோடி வரை நிதி தேவைப்படுகிறது. நிதி கிடைத்ததும் தார்சாலைகள் அமைக்கப்படும். இங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி தார்சாலையை போடும்படி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதற்காக எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேசியதாவது:-

ராசிபுரம் நகராட்சி, வெண்ணந்தூர், அத்தனூர், பிள்ளாநல்லூர், பட்டணம் போன்ற பகுதிகளில் நிரந்தரமாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க புதிதாக நெடுங்குளம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும். அதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. ராசிபுரம் நகராட்சிக்கு தமிழக அரசு ரூ.12 கோடி மானியம் வழங்கும். புதிய குடிநீர் திட்டத்திற்கு அனுமதி கிடைத்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனை தொடங்கி வைப்பார். புதிய குடிநீர் திட்டத்தை நிறைவேற்றிவிட்டால் 30, 40 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை வராது.

இவ்வாறு அவர் கூறினார். முடிவில் நகராட்சி பொறியாளர் நடேசன் நன்றி கூறினார்.

விழாவில் முன்னாள் நகரசபை தலைவர் மகாலிங்கம், அ.தி.மு.க. நகர அவைத்தலைவர் ராமசாமி, வீட்டு வசதி சங்கத் தலைவர் கோபால், நகர வங்கி துணைத் தலைவர் வெங்கடாசலம், முன்னாள் நகரசபை துணை தலைவர் கந்தசாமி, மோகனூர் சர்க்கரை ஆலை தலைவர் வக்கீல் சுரேஷ்குமார், மசக்காளிப்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் பிரகாசம், ராசிபுரம் சூபர் பட்டு சொசைட்டி இயக்குனர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக ராசிபுரம் அருகேயுள்ள பொன்குறிச்சியில் ரூ.17 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதற்கும், குருக்கபுரம் ஊராட்சி ஆண்டகளூர்கேட்டில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார வளாகம் கட்டுவதற்கும், முத்துக்காளிப்பட்டியில் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கப்பி சாலை மற்றும் தார்சாலை அமைக்கவும், சிங்களாந்தபுரத்தில் ரூ.18 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் கப்பி சாலை அமைக்கவும் பூமி பூஜை நடந்தது.

இந்த விழாக்களில் மொத்தம் ரூ.63 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள பணிகளை அமைச்சர்கள் பி.தங்கமணி மற்றும் டாக்டர் வெ.சரோஜா தொடங்கி வைத்தனர்.

விழாக்களில் மாவட்ட திட்ட அலுவலர் மாலதி, மாவட்ட ஊராட்சி செயலாளர் பிரியா, ராசிபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தனபால், கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் காளியப்பன் (ராசிபுரம்), இ.கே.பொன்னுசாமி (நாமகிரிப்பேட்டை கிழக்கு), எல்.எஸ்.மணி (நாமகிரிப்பேட்டை மேற்கு), முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் ராதா சந்திரசேகர், குருக்கபுரம் கூட்டுறவு சங்க தலைவர் குழந்தைவேல், ராசிபுரம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பாலாமணி, பிள்ளாநல்லூர் மகளிர் அணி செயலாளர் வெண்ணிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story