சூப்பிரண்டு அலுவலகம் முன் பெண் போலீஸ் தாய் தீக்குளிக்க முயற்சி
திருட்டு வழக்குகளில் மகனுக்கு போலீசார் தொந்தரவு கொடுப்பதை கண்டித்து சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பெண் போலீசின் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
தேனி,
பெரியகுளம் அருகே உள்ள தென்கரை இடுக்கடிலாட்டு தெருவை சேர்ந்த கருப்பையா மனைவி சாரதா (வயது 40). இவர், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அவருடைய தந்தை முனியாண்டி, தாயார் முனியம்மாள், தங்கை பூங்கொடி ஆகியோரும் உடன் வந்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நுழைவு வாயில் அருகில் அவர்கள் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கிய போது அங்கு மோட்டார் சைக்கிள் ரோந்து படை போலீஸ் ஏட்டு எழில்வளவன் நின்று கொண்டு இருந்தார். ஆட்டோவில் இருந்து இறங்கிய போது சாரதாவின் கையில் ஒரு கேன் வைத்து இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்து அந்த கேனை ஏட்டு எழில்வளவன் சோதனையிட முயன்றபோது அவர் கொடுக்க மறுத்துள்ளார். பின்னர் அவரிடம் இருந்து கேனை பறித்து சோதனையிட்ட போது அதில் மண்எண்ணெய் இருந்தது. அவர் தீக்குளிப்பதற்காக மண்எண்ணெய் கொண்டு வந்ததாக கூறியுள்ளார்.
கைது
இதையடுத்து தற்கொலை முயற்சியை முறியடிப்பதற்காக கேனை திறந்து அதில் இருந்த மண்எண்ணெயை எழில்வளவன் சாலையில் ஊற்றினார். இதனால், சாலையில் கொட்டிய மண்எண்ணெய் மீது சாரதா படுத்து உருண்டார். பின்னர் அவர் தனது தந்தையிடம் இருந்து தீப்பெட்டியை வாங்க முயன்றார். அதற்குள் அங்கு வந்த போலீசார் தீப்பெட்டியை பறித்துக் கொண்டனர். மண்எண்ணெய் மீது உருண்ட சாரதா மீது போலீசார் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றினர். பின்னர் சாரதா உள்பட 4 பேரையும் போலீசார் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் தற்கொலைக்கு முயன்றதாக சாரதா மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
முன்னதாக தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்து சாரதா கூறியதாவது:-
எனக்கு அருண்குமார் என்ற மகனும், அருணாதேவி என்ற மகளும் உள்ளனர். எனது கணவர் என்னை பிரிந்து சென்று விட்டார். எனது மகன் ஆட்டோ ஓட்டி வருகிறான். எனது மகள் போலீஸ் பணிக்கு தேர்வாகி தூத்துக்குடியில் பயிற்சி பெற்று வருகிறாள். எனது மகன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறி ஏற்கனவே 2 முறை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், தற்போதும் மீண்டும் எனது மகனை திருட்டு வழக்குகளில் தொடர்புபடுத்தி போலீசார் தொந்தரவு செய்கின்றனர். யாராவது திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டால் அவர்கள் சொன்னதாக கூறி எனது மகனையும் போலீசார் தொந்தரவு செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவில் எனது மகனை தேடி எனது வீட்டுக்கு தென்கரை போலீசார் வந்தனர். அவர்கள் என்னையும் மிரட்டிச் சென்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story