சேலம் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க அட்டை பெட்டிகள் இன்றும், நாளையும் வைக்கப்படுகிறது


சேலம் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க அட்டை பெட்டிகள் இன்றும், நாளையும் வைக்கப்படுகிறது
x
தினத்தந்தி 30 Dec 2018 4:00 AM IST (Updated: 30 Dec 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க இன்றும், நாளையும் அட்டை பெட்டிகள் வைக்கப்படுகிறது.

சேலம், 

தமிழகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து சேலம் புதிய பஸ்நிலையத்தில் பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதனை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார். பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொம்மலாட்டம் மூலம் பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை தவிர்ப்பது தொடர்பான உறுதிமொழி ஆணையாளர் சதீஷ் தலைமையில் பொதுமக்கள் எடுத்து கொண்டனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கான மாற்று பொருட்கள் கண்காட்சியை ஆணையாளர் சதீஷ் பார்வையிட்டார். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பட்டியல் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் அவர் வழங்கினார்.

இதுகுறித்து ஆணையாளர் சதீஷ் நிருபர்களிடம் கூறும் போது, ‘பொதுமக்கள் கூடும் இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இன்றும்(ஞாயிற்றுக்கிழமை), நாளையும்(திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம் மற்றும் 4 மண்டல அலுவலகங்களில் பிளாஸ்டிக் பைகள், கழிவுகள் சேகரிப்பதற்கான அட்டைபெட்டிகள் வைக்கப்படும். இதில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை போடலாம். குடோன்களில் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது குறித்து தகவல் கொடுத்தால், அதை மாநகராட்சி வாகனம் மூலம் எடுத்து கொள்ளப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் திலகா, சுகாதார அலுவலர்கள் மணிகண்டன், ரவிசந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story