பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: டாஸ்மாக் பார்களை கண்காணிக்க அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பு


பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: டாஸ்மாக் பார்களை கண்காணிக்க அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பு
x
தினத்தந்தி 29 Dec 2018 10:00 PM GMT (Updated: 29 Dec 2018 7:50 PM GMT)

சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க அதிகாரிகள் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சேலம், 

தமிழகத்தில் 1.1.2019 முதல் மறுசுழற்சி செய்யமுடியாத, ஒரு முறையே பயன்படுத்தப்படும் “பிளாஸ்டிக்” பொருட்களை பயன்படுத்த தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யவோ, தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ கூடாது. கடைகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதில் என்ன மாதிரி பைகளை பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதால் அது சம்பந்தமான விழிப்புணர்வு ஊர்வலம், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, அரசு டாஸ்மாக் கடைகளிலும், அதனுடன் உரிமம் பெற்று நடத்தி வரும் பார்களிலும் பிளாஸ்டிக் தம்ளர், தண்ணீர் பாக்கெட் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் தண்ணீர் பாட்டில்கள், சில்வர் மற்றும் கண்ணாடி தம்ளர் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு பார் உரிமையாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலுக்கு வர உள்ளதால் டாஸ்மாக் பார்களை கண்காணிக்க 5 அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, சேலம் சந்தியூர் மதுபானக் கிடங்கு மேலாளர் தேன்மொழி, சேலம் மேற்கு மதுபானக் கிடங்கு மேலாளர் முகமது குதரத்துல்லா, கலால் மேற்பார்வை அலுவலர் கண்ணன், சந்தியூர் மதுபானக்கிடங்கு உதவி மேலாளர்கள் பிரபாகரன், ஜெ.கண்ணன் ஆகிய 5 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தாலுகாவிற்குட்பட்ட டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்துராமலிங்கம் கூறியதாவது:-

தமிழக அரசு உத்தரவுபடி ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கிய எறியக்கூடிய மக்காத, மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக அனைத்து டாஸ்மாக் பார்களை நடத்தி வரும் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. உணவு பொருட்களுக்கு உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள் உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் தம்ளர், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் சம்பந்தமான எந்த பொருட்களாக இருந்தாலும் அவற்றை பயன்படுத்தக்கூடாது. இதை மீறி பார்களில் பயன்படுத்தினால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு தாலுகா வாயிலாக 5 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வருகிற 1-ந் தேதி முதல் அவ்வப்போது டாஸ்மாக் பார்களில் சோதனை நடத்துவார்கள். அப்போது, பிளாஸ்டிக் தம்ளர், தண்ணீர் பாக்கெட் பயன்படுத்துவது தெரியவந்தால் அவற்றை பறிமுதல் செய்வதோடு சம்பந்தப்பட்ட பார் உரிமம் ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story