தி.மு.க. கூட்டத்தில் திடீர் மோதல், நாற்காலிகளை வீசி தாக்குதல்
முதுகுளத்தூரில் தி.மு.க. கூட்டத்தில் திடீர் மோதல் ஏற்பட்டு நாற்காலிகள் வீசி தாக்குதல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் முதுகுளத்தூரில் ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், பெருநாழி போஸ், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, மேகநாதன், சுப்பிரமணியன், திவாகரன், ஒன்றிய செயலாளர்கள் பூபதிமணி, முத்துராமலிங்கம், ராஜசேகர் உள்பட கமுதி, கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர் ஒன்றியங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மேடையில் அனைவருக்கும் பேச வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தொண்டர்கள் சிலர் கூச்சலிட்டதால் திடீர் சலசலப்பு உருவானது. அதன் பிறகு முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கத்திற்கு மேடையில் பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் பேசிய போது, “தனித்தனி குழுவாக தி.மு.க.வினர் செயல்பட்டு வருவதாகவும், இதற்கு தொகுதி பொறுப்பாளர் தனது உரையில் பதில் சொல்ல வேண்டும்“ என வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே மேடையை மறைக்காமல் நிற்கவேண்டும் என்று சிலரிடம் கூறியது தொடர்பாக அங்கு நின்றிருந்தவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது. ஒருவரை ஒருவர் நாற்காலிகளை வீசி தாக்கி கொண்டனர்.
அப்போது முன்னாள் மாவட்டசெயலாளர் சுப.தங்கவேலன் ஆதரவாளர்களுக்கும், மாவட்ட புதிய பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆதரவாளர்களுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டு அவர்களும் நாற்காலிகளை வீசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் மேடையில் இருந்த முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், “கூட்டத்தில் பிரச்சினை ஏற்படுத்தாதீர்கள்“ என எச்சரித்தார்.
Related Tags :
Next Story