திருமண உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய 3 பெண் அதிகாரிகள் சிக்கினர்
திருமண உதவி தொகை கொடுக்க லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிரடி சோதனை செய்தனர். இதில் 3 பெண் அதிகாரிகள் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.47 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏழை-எளிய மக்களுக்கு சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோவையில் நடக்கிறது. இதில் பட்டதாரி பெண்களுக்கு திருமண உதவி தொகையாக ரூ.50 ஆயிரம், 8 கிராம் தங்கம், பட்டதாரி அல்லாத பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இந்த உதவி தொகையை பெற பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர்களுக்கு பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று டோக்கன் வழங்கப்பட்டன. இதில் சமூகநலத்துறை விரிவாக்க அதிகாரி மைதிலி, ஒன்றிய ஊர்நல அதிகாரிகள் மேரி தெரசா (தெற்கு ஒன்றியம்), மல்லிகா (வடக்கு ஒன்றியம்) ஆகியோர் பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கினார்கள்.
இதில் பட்டதாரி பெண்கள் திருமண உதவி தொகைக்கு டோக்கன் பெற ரூ.1,500-ம், பட்டதாரி அல்லாத பெண்கள் டோக்கன் பெற ரூ.1000-மும் லஞ்சம் வாங்குவதாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஷ் தலைமையில் போலீசார் மதியம் 1½ மணிக்கு சம்பவ இடத்துக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் தெற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக கேட்டை இழுத்து மூடினார்கள். உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. அந்த அலுவலகத்துக்குள் இருந்து டோக்கன் வழங்கிக்கொண்டு இருந்த 3 அதிகாரிகளை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 9½ மணி வரை 8 மணி நேரம் நடந்தது. அப்போது அவர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.47 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் குறித்து போலீசார் விசாரித்தபோது, 42 பயனாளிகளிடம் இருந்து லஞ்சமாக பெற்ற பணம் என்பது தெரியவந்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஷ் கூறியதாவது:-
லஞ்சம் வாங்குவதாக எங்களுக்கு புகார் வரும்போது ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து, அந்த நோட்டுகளை ஒருவர் அதிகாரியிடம் கொடுக்கும்போது கையும் களவுமாக பிடித்தால் கைது செய்வோம். ஆனால் இங்கு அதிகாரிகள் மைதிலி, மேரி தெரசா, மல்லிகா ஆகியோர் திருமண உதவி தொகை பெற டோக்கன் கொடுக்க 42 பயனாளிகளிடம் இருந்து ரூ.47 ஆயிரம் லஞ்சம் பெற்று உள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த அலுவலகத்தில் லஞ்சம் தொடர்பான விழிப்புணர்வு பலகை இல்லை. அதை உடனே வைக்க உத்தரவிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து டோக்கன் வாங்க வந்த பயனாளிகள் கூறும்போது, எங்களுக்கு தற்போது டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் எங்களின் ரேஷன் கார்டில் திருமண உதவி தொகை வழங்கப்பட்டு விட்டது என்று அதிகாரிகள் சீல் வைத்து உள்ளனர். ஒருவேளை எங்களுக்கு உதவி தொகை கிடைக்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது என்று புலம்பினார்கள்.
Related Tags :
Next Story