நீலகிரி மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.111¼ கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் - கலெக்டர் பேச்சு


நீலகிரி மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.111¼ கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் - கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 29 Dec 2018 11:00 PM GMT (Updated: 29 Dec 2018 9:19 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.111¼ கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

ஊட்டி,


தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இதையொட்டி நீலகிரி மாவட்ட தொழில் மையம் சார்பில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் சிறப்பு நோக்கு விழா ஊட்டியில் ஒரு ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் நீலகிரியில் சுயதொழில் மற்றும் தொழிற்சாலைகள் தொடங்குவது தொடர்பாக விழா நடந்தது. விழாவுக்கு கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., கோபாலகிருஷ்ணன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, பல்வேறு தொழில்கள் தமிழகத்தில் உருவாக நடவடிக்கை எடுத்தார். இதன் மூலம் தொழில்களை தொடங்க சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. மேலும் ஒற்றை சாளர முறையில் தடையில்லா சான்று பெறவும், வங்கிகள் மூலம் கடன் பெறவும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

சமவெளி மாவட்டங்களை போன்று நீலகிரி மாவட்டம் இல்லை. அதிக வனப்பகுதிகளை கொண்ட நீலகிரியில் சிறு, குறு தொழில்களை தொடங்க சட்டம் கடினமாக உள்ளது. மாவட்ட கலெக்டர் அனுமதி, மாவட்ட அழகுணர்வு குழு அனுமதி மற்றும் சென்னையில் உள்ள ஹாக்ஹாக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும். அப்போது தான் நீலகிரியில் தொழில்கள் தொடங்க முடியும். சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப தேயிலை தொழிற்சாலை, சுற்றுலா தொழில், ஓட்டல் போன்ற தொழில்களை ஆரம்பிக்கலாம்.

இந்த மாவட்டத்தில் கனரக தொழிற்சாலைகள் தொடங்க முடியாது. கடந்த 2002-ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது. அதற்கான மாற்று தொழில்களை தொடங்க முன்வர வேண்டும். நீலகிரியில் ரூ.100 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்ததுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.111.26 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

புதியதாக தொழில் தொடங்குபவர்கள் நீலகிரி மாவட்ட தொழில் மையம் மற்றும் கூடலூர் சாலிஸ்பிரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் வாரந்தோறும் வியாழக்கிழமை, குன்னூரில் இன்கோசர்வ் அலுவலகம் மற்றும் கோத்தகிரியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் அதிகாரிகளை சந்தித்து உரிய ஆலோசனைகளை பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

நீலகிரி மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் தேயிலைத்தூள் உற்பத்தி, வாசனை திரவியங்கள் தயாரிப்பு, தைலம் தயாரிப்பு, சர்வதேச பள்ளியில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துதல், சுற்றுலா ஓட்டல்கள், இயற்கை உரம் தயாரிப்பு, பேக்கரி மூலம் உணவு தயாரிப்பு போன்ற தொழில்கள் என மொத்தம் முதலீட்டாளர்கள் 31 பேர் தொழில் தொடங்குவதற்கு ரூ.111.26 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்த ஆணைகள் வழங்கப்பட்டது.

ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்காமல் தொழில் தொடங்க மின்சாரம், குடிநீர் மிக அவசியம். ஊட்டி-கோத்தகிரி சாலை பேரார் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலைக்கு மின் இணைப்பு, குடிநீர் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.

இதனால் தொழிற்சாலை உரிமையாளருக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்கும் அனைவருக்கும் உடனடியாக அனுமதி வழங்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். விழாவில் இன்கோசர்வ் நிர்வாக இயக்குனர் வினீத், தமிழ்நாடு ஆவின் இணைய தலைவர் மில்லர், சாந்தி ராமு எம்.எல்.ஏ., முன்னோடி வங்கி மேலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஊட்டி நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், காந்தல் முக்கோணம் மற்றும் குருசடி காலனி பகுதியில் மொத்தம் ரூ.94.85 லட்சம் மதிப்பில் தலா 2 டன் அளவில் கட்டப்பட்ட நுண் உர செயலாக்க மையங்களை கலெக்டர் திறந்து வைத்தார்.

இந்த மையங்களில் மக்கும் குப்பைகளை எந்திரம் மூலம் துகள்களாக மாற்றி, தொட்டிகளில் பதப்படுத்தி 42 நாட்களில் உரமாக்கப்படும். பின்னர் இந்த உரம் விவசாயிகளுக்கு கிலோ ரூ.2-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story