கூடலூர் அருகே ஆற்றில் மீன் பிடித்த 4 பேர் கைது
கூடலூர் அருகே ஆற்றில் மீன்பிடித்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனம் உள்ளது. இதனால் வனத்துக்குள் அத்துமீறி நுழைய வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் ஆற்றில் மீன்பிடிக்கவும் அனுமதி கிடையாது. இந்த நிலையில் வனத்துக்குள் அத்துமீறி ஆற்றில் வலைகளை விரித்து மீன்கள் பிடிப்பதாக ஓவேலி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி நேற்று முன்தினம் வனத்துறையினர் பாண்டியாறு குண்டம்புழா வனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாக்கப்பட்ட வனத்தில் இருந்து 4 பேர் வெளியே நடந்து வந்து கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது வலைகள் மற்றும் ஆற்றில் பிடித்த மீன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மம்பாடு பகுதியை சேர்ந்த யாகோப் (வயது 39), நிலம்பூர் தாலுகா நடுவத் கிராமத்தை சேர்ந்த சாகுல் அமீது (22), முன்டம்பரம்பை சேர்ந்த நசிப்முகமது (19), மீனங்காடி அருகே குன்னத்துபரம்பு முகமது நாதர்ஷா (18) ஆகிய 4 பேர் என தெரிய வந்தது.
இதையடுத்து ஓவேலி வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து யாகோப், சாகுல் அமீது, நசிப்முகமது, நாதர்ஷா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆற்றில் மீன்கள் பிடித்ததாக கேரள ஆசாமிகள் சிலரை ஏற்கனவே வனத்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story