நாகையில் ஆட்கள் இன்றி கடலில் நின்ற பர்மா படகு - மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர்


நாகையில் ஆட்கள் இன்றி கடலில் நின்ற பர்மா படகு - மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர்
x
தினத்தந்தி 30 Dec 2018 4:30 AM IST (Updated: 30 Dec 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் ஆட்கள் இன்றி கடலில் நின்ற பர்மா நாட்டை சேர்ந்த படகை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை அடுத்த சாமந்தான்பேட்டை பகுதியில் நேற்று காலை கடற்கரையில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் படகு ஒன்று நின்றுகொண்டிருந்தது. இந்த படகை சாமந்தான் பேட்டையை சேர்ந்த மீனவர்கள் சிவானந்தன், சிலம்பரசன் ஆகியோர் தங்களின் படகுகளில் சென்று பார்த்தனர். அப்போது அதில் யாரும் இல்லாததால் படகை கயிறு மூலம் தங்கள் படகுகளில் கட்டி கரைக்கு இழுத்து வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் அருண், நாகை தாசில்தார் இளங்கோவன், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படகை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த கப்பலில் புத்தர் சிலைகள், படங்கள், புத்தமத புத்தகங்கள் உள்பட புத்த மத வழிபாட்டு பொருட்கள், பூஜை பொருட்கள் இருந்தன. அரிசி, கோதுமை, வெங்காயம் போன்ற சமையலுக்கு தேவையான பொருட்களும் இருந்தன. மேலும் அந்த படகில், பிரதேசம், குடும்பம் மற்றும் பாலினம் என்ற பர்மீஸ் மொழியில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. இந்த படகில் இரும்பு பேரல் மற்றும் பெரிய அளவிலான மூங்கில்களால் கட்டமைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படகு புத்தமத கோவில் போல் காட்சியளித்தது.

பர்மா நாட்டில் கடற்கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகு காற்றின் வேகத்தில் கடலில் அடித்து வரப்பட்டதா? அல்லது தீவிரவாதிகள் யாரும் அதில் வந்தனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தாசில்தார் முன்னிலையில் மத்திய சுங்க இலாகா அதிகாரிகளிடம் அந்த படகை ஒப்படைத்தனர். நாகையில் பர்மா நாட்டை சேர்ந்த படகு கரை ஒதுங்கியது குறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மீனவர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று பார்த்து வருகின்றனர்.


Next Story