சாத்தூர் கர்ப்பிணிக்கு இலவச மனையுடன் பசுமை வீடு
சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தியதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு இலவச வீட்டுமனை பட்டாவையும், பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையையும் அவரை நேரில் சந்தித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.
மதுரை,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் கர்ப்பிணி மனைவிக்கு, உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு உரிய நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவரை நேரில் சந்தித்து உறுதி அளித்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம், மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்து அந்த பெண்ணை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அந்த பெண்ணுக்கு 3 சென்ட் நிலத்திற்கான இலவச வீட்டுமனை பட்டாவை அவரது பெயரில் வழங்கியதோடு, பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையையும் வழங்கினார். மேலும் அரசு அவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களிடம் கலெக்டர் சிவஞானம் கூறியதாவது:-
எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட சாத்தூர் கர்ப்பிணிக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையையும் நேரில் வழங்கினேன்.
இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட அளவில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தவறுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாதிரியான தவறு இனி நடக்காத வண்ணம் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
முன்னேற துடிக்கும் மாவட்டங்களின் தரவரிசை பட்டியலில் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டம் முதல் இடம் பெற்றுள்ளதால், மாற்றத்திற்கான வெற்றியாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலத்தில் சுகாதாரம், விவசாயம், நிதி மேலாண்மை, திறன் மேம்பாடு ஆகியவற்றிலும் சிறப்பான வளர்ச்சி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பான தொடர் ஆய்வுகளில் முதல் இடத்தை தக்க வைத்துக்கொள்ள முழுவீச்சில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story