உடுமலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 88 பேர் கைது
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உடுமலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 88 பேர் கைது செய்யப்பட்டனர்.
உடுமலை,
தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் கடந்த 17-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 23-ந்தேதி முதல் உண்ணா விரத போராட்டமும் நடைபெற்று வருகிறது. இதுவரை அரசு சார்பில் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், இந்த பிரச்சினையை தீர்க்க அரசு பேச்சுவார்த்தை நடத்த கோரியும் உடுமலையில் அரசியல் கட்சியினர் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக போலீசில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் அரசியல் கட்சியினர் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத் தினர். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை தாங்கி பேசினார்.
இதில் விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஏ.பாலதண்டபாணி, உடுக்கம் பாளையம் பரமசிவம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செ.செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.எஸ்.ரணதேவ், ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் வி.சவுந்திரராஜன், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் டி.கோவிந்தராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் டி.ரெத்தினவேல், உடுமலை நகர தலைவர் ஏ.பாலகிருஷ்ணன், தே.மு.தி.க. நகர செயலாளர் ராமச்சந்திரன், ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தெற்கு மாவட்ட தலைவர் கொங்கு ரவிச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய பிரிவு செயலாளர் முத்தமிழ் வேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 3 பெண்கள் உள்பட 88 பேரை போலீசார் கைது செய்து வேன்கள் மூலம் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் மாலையில் கைதான அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story