தஞ்சை தேர்சிற்பம் உள்ளிட்ட 30 பொருட்களுக்கு புவிசார் குறியீடு: அறிவுசார் சொத்துரிமை சங்க தலைவர் சஞ்சய்காந்தி பேட்டி


தஞ்சை தேர்சிற்பம் உள்ளிட்ட 30 பொருட்களுக்கு புவிசார் குறியீடு: அறிவுசார் சொத்துரிமை சங்க தலைவர் சஞ்சய்காந்தி பேட்டி
x
தினத்தந்தி 29 Dec 2018 11:22 PM GMT (Updated: 29 Dec 2018 11:22 PM GMT)

தஞ்சை தேர்சிற்பம் உள்ளிட்ட 30 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்று அறிவுசார் சொத்துரிமை சங்க தலைவர் சஞ்சய்காந்தி கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் வீணை உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த வீணைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டது. இதற்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் 22 கைவினைஞர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ்களை அறிவுசார் சொத்துரிமை சங்க தலைவர் வக்கீல் சஞ்சய்காந்தி வழங்கினார்.

தஞ்சை இசைக்கருவிகள் செய்வோர் குடிசை தொழில் சங்க தலைவர் சீனிவாசன் முன்னிலையில் கைவினை கலைஞர்கள் புவிசார் குறியீடுக்கான சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். முடிவில் மீனா நன்றி கூறினார்.

பின்னர் சஞ்சய்காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள தனிசிறப்புடைய பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு அதற்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் 22 கைவினைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வீணைகள் தயாரிப்பு இருந்தாலும் தஞ்சாவூர் வீணைக்கு தனித்துவம் உண்டு. இந்த சான்றிதழ் பெற்ற 22 நபர்கள் மட்டும் தான் தஞ்சாவூர் வீணை என பயன்படுத்த முடியும். இவர்களுக்கு ஆர்.ஜி. என புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் வீணையை வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செய்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தஞ்சை தேர் சிற்பங்கள், திருபுவனம் பட்டு சேலைகள், மரவேலைப்பாடுகள், சேலம் மாம்பழம், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உள்பட 30 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கும்.

இதேபோல் திருநெல்வேலி அருகே தயாரிக்கப்படும் கோவில் மணி உள்ளிட்ட 10 பொருட்களுக்கும் விரைவில் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க உள்ளோம். புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள தஞ்சாவூர் வீணைக்கு விரைவில் தபால் தலை வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம் இவ்வாறு அவர் கூறினார்.


Next Story