கர்நாடகத்தில், தமிழர்களின் நலனை பாதுகாக்க கன்னடிக-தமிழர் சமூக நல அறக்கட்டளை


கர்நாடகத்தில், தமிழர்களின் நலனை பாதுகாக்க கன்னடிக-தமிழர் சமூக நல அறக்கட்டளை
x
தினத்தந்தி 30 Dec 2018 4:56 AM IST (Updated: 30 Dec 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில், தமிழர்களின் நலனை பாதுகாக்க கன்னடிக-தமிழர் சமூக நல அறக்கட்டளையை ஹாரீஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பல லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவ்வாறு வாழ்ந்து வருபவர்கள் கன்னட தமிழர்களாகவே இருந்து வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு அரசின் மூலம் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள், கல்வி உள்ளிட்ட சலுகைகளை பெற்று கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் பெங்களூருவில் கன்னடிக-தமிழர் சமூக நல அறக்கட்டளையை சாந்திநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ஹாரீஸ் தொடங்கியுள்ளார்.

இந்த அறக்கட்டளையின் நிறுவனராக ஹாரீஸ் எம்.எல்.ஏ.வும், தலைவராக மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் மோகன், துணை தலைவர்களாக சிவக்குமார், சுந்தர், செயலாளராக பிரபு உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு சாந்திநகரில் நடந்த நிகழ்ச்சியில் கன்னடிக-தமிழர் சமூக நல அறக்கட்டளையை ஹாரீஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியதாவது:-

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வசிக்கும் தமிழர்கள், கன்னடர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். சாந்திநகர் தொகுதியில் அதிகஅளவில் தமிழர்கள் வசிக்கின்றனர். மாநிலத்தின் வளர்ச்சியில் தமிழர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். கன்னட தமிழர்களின் நலனை பேணி காக்கும் நோக்கத்தில் கன்னடிக-தமிழர் சமூக நல அறக்கட்டளை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை மூலம் இலவச கல்வி, மருத்துவம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கன்னட தமிழர்களுக்கு தேவையான உதவிகள் அரசிடம் இருந்து பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழர்களின் நலன் பேணி பாதுகாக்கப்படும். அதனால் பெங்களூருவில் வசிக்கும் கன்னட தமிழர்கள், இந்த அறக்கட்டளையில் உறுப்பினராக சேர்ந்து பயன் அடையும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஹாரீஸ் எம்.எல்.ஏ.பேசினார்.

Next Story