நூதன முறையில் ஏ.டி.எம். கார்டுகளை திருடி கல்லூரி மாணவி, தனியார் ஊழியரிடம் பணம் அபேஸ்


நூதன முறையில் ஏ.டி.எம். கார்டுகளை திருடி கல்லூரி மாணவி, தனியார் ஊழியரிடம் பணம் அபேஸ்
x
தினத்தந்தி 30 Dec 2018 3:45 AM IST (Updated: 30 Dec 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் காவலாளி போல் நடித்து நூதன முறையில் ஏ.டி.எம். கார்டுகளை திருடி கல்லூரி மாணவி உள்பட 2 பேரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பழனி, 

பழனியை சேர்ந்தவர் கார்த்திகா (வயது 22). பழனியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர், பழனி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக சென்றார்.

அப்போது ஏ.டி.எம். மையத்தில் காவலாளி போல் இருந்த ஒருவர், பணம் எடுக்க தான் உதவுவதாக கார்த்திகாவிடம் கூறியுள்ளார். இதை நம்பிய கார்த்திகா அவரிடம் ஏ.டி.எம். கார்டையும், ரகசிய குறியீட்டு எண்ணையும் கொடுத்தார். பின்னர் ஏ.டி.எம்.மில் மாணவி கூறிய தொகையை எடுத்துக்கொடுத்த நபர், ஏ.டி.எம். கார்டையும் திரும்ப கொடுத்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அவரின் செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் அவருடைய ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி, வங்கி கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த கார்த்திகா உடனே தன்னிடம் உள்ள ஏ.டி.எம். கார்டை எடுத்து பார்த்தார். அப்போது தான் அது போலியான ஏ.டி.எம். கார்டு என்பது அவருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அந்த ஏ.டி.எம். மையத்துக்கு சென்று தனக்கு உதவிய காவலாளியிடம் விசாரிக்க சென்றார். ஆனால் அவர் அங்கு இல்லை. அப்போது தான் அவர் காவலாளி போல் நடித்து நூதன முறையில் தனது ஏ.டி.எம். கார்டை திருடி வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பழனி நகர் போலீசில் கார்த்திகா புகார் அளித்தார்.

இதேபோல் பழனி பத்ரா தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மணி (40) என்பவரின் ஏ.டி.எம். கார்டையும், காவலாளி போல் நடித்த மர்ம நபர் நூதன முறையில் திருடி, அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் வரை எடுத்துள்ளார்.

இதுகுறித்து பழனி நகர் போலீசில் மணி புகார் அளித்தார். இந்த புகார்களின் பேரிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏ.டி.எம். மையங்களில் காவலாளி போல் மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பழனியில் கல்லூரி மாணவி உள்பட 2 பேரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story